பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

147


அப்பா இன்னும் என்னென்ன பாடம் ஒப்புவிக்க வேண்டுமென்று 'மனப்பாடம் ' செய்து வைத்திருந்தாரோ? அதற்குள் நான் இடைமறித்தேன். "அப்பா!" என்று ஓங்காரக் கூச்சலைப் பரப்பினேன். என் இதய ஒலி மண்ணில் பறந்தது; நான் விண்ணில் பறந்தேன். என் தகப்பனாரின் இந்தப் பேச்சுக்கு அம்மாவுக்கு அர்த்தம் தெரியுமல்லவா? அம்மா!... அம்மா!...நீ எங்கே இருக்கிறாய் அம்மா?...உன்னுடைய கண்ணாமூச்சி விளையாட்டுக்கு நான் தான கண்கட்டிக் கொள்ளக் கிடைத்தேன்? அம்மா!...அம்மா கண்கட்டை அவிழ்க்க மாட்டாயா தாயே?

“காந்தி, ஏம்மா அப்பிடிப்பார்க்கிறே? நான் ஒண்னும் தப்பாச் சொல்லலே அம்மா!...இந்தாப்பாரு கண்ணு! எத்தனை நாளைக்குத்தான் வயசுப் பொண்ணு நீ இப்படியே பிறந்த வீட்டிலேயே அடைஞ்சுகிடக்கிறதாம்?...ஊர் உலகம் அப்பறம் என்ன சொல்லும்?. தாயில்லாப் பொண்ணுக்கு ஒரு வழி வகை செய்யத்தெரியாத அப்பன்னு என்னை ஏசுவாங்க, காந்தி ...நீ கண்ணத் துடைச்சுக்க; அத்தோட, என் கண்ணையும் துடைச்சுவிடம்மா...இந்தாப் பாரேன்!...எங்கே சிரி!......என் ராஜாத்தியல்லே...ஆ.ஆ.சபாஷ்!...இப்ப உன்கிட்டே ஒரு ரகசியத்தைச் சொல்லப் போகிறேனாக்கும். காந்தி!...அம்மா காந்தி!...உனக்கு வைகாசி மாசத்திலே கல்யாணம்!ஆமா...இத்தாப்பாரு ! இதுதான் மகப்பிள்ளை போட்டோப் படம்!...எங்கண்ணுக்கு ஏத்த மாப்பிள்ளைகள்!...ம், முழிச்சுப் பாரும்மா!"

கண்களைப் பொத்திக் கொண்டு சமயலறைக்கு ஓடிவந்துவிட்டென் நான். எனக்கு நானே கண்பொத்தி விளையாடி விட்டேனா?-" அம்மா!"