பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

171


ரவிக்கை முடிச்சுக்களை அவிழ்த்த நேரத்தில், காத்தமுத்து பேப்பர் இருக்கா, பேப்பர்! கல்கி, ஆனந்த விகடன், குமுதம், தினமணி பேப்பர்!’ என்று கத்திக்கொண்டே உள்ளே நுழைந்து, பெரிய விகடத்துணுக்கைச் சொல்லி விட்டவன் போலச் சிரித்து வைத்தான். இம்மாதிரி சந்தர்ப்பங்களிலே சிரிக்காவிட்டால் ஆபத்து என்பதை ஊகித்து வைத்திருந்த வேலாயியும் கடனுக்குச் சிரித்து வைத்தாள். காலைக் கஞ்சியை கோப்பையில் வார்க்கும் பொழுது, ஆமாங்கிறேன். பிறந்த நாளுன்னா அது என்னவாம்?’ என்று வினவினாள்.

பெரிய மனிதர்களின் காம்பவுண்டுகளிலே புழங்குகிறவனுக்கு மனைவியின் சந்தேகத்தை நிவர்த்தி செய்யத் தெரியாமல் இருக்குமா? சாங்கோபாங்கமாகச் சொன்னான் ! அப்படீன்னு மச்சான்! நம்ம செவந்திக் குட்டிக்கும் ஒரு பொறந்தநாள் வைபோகம் கடத்திப்புடலாமே! ஆமா, வார செவ்வாய் வந்தாக்க நம்ப பொண்ணு பொறந்து வள்ளிசா ஒரு வருசம் ஆகிடுமே!’ என்றாள். பெற்ற மனத்தில் தழைத்த மகிழ்வின் காரணமாக, அவனுக்கு ஒரு கரண்டி அயிரை மீன் சுண்டல்க் குழம்பு கூடுதலாகவே கிடைத்தது!

ராஜாவின் பிறந்த நாள் விழா கோலாகலமாக நடந்தேற கேட்கவும் வேண்டுமோ? அழைப்புக்கள் ரயிலேறிப் போனதுதான் தாமதம், உற்றவர்களும் உறவுக்காரர்களும் ரயிலேறி வந்து விட்டார்கள். கடைசி மைத்துனன் மட்டும் லடாக்கில் அகப்பட்டுக் கொள்ளவே, தேவியார் ஆயிரம் முறை அந்தப் பாழாய்ப் போன சீனக்காரனே வறுத்தெடுத்து விட்டாள்!

குமாரி குந்தளா நடனம்.

ஶ்ரீமதி மோகனாம்பாள் பாட்டுக் கச்சேரி,