பக்கம்:ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

□ 7

ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர் தோற்றங்கள் தோன்றி, இறுதியாக ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் ‘அணு’யுக ஆய்வு பிறந்து, அது அழிவையும் ஆக்கத்தையும் அவனியிலே தோற்றுவித்துள்ளதையும் நாம் பார்க்கிறோம்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய ஓர் அறிவியல் மேதை! அவருக்கு முன்பு வாழ்ந்த விஞ்ஞான வித்தகர்களின் ஆய்வுகளுக்கு எல்லாம் சிகரம் வைத்தார் போன்ற ஒரு தனிப்புரட்சியை உருவாக்கியவர். ஆனால், அவர் எந்த ஒரு விஞ்ஞானியின் ஆய்வையும் குறைத்து மதிப்பிடாத முதிர்ந்த ஒரு விஞ்ஞான ஞானியாக விளங்கினார் என்பதுதான் உண்மையிலும் உண்மையாகும்.

ஐன்ஸ்டைன் பிறப்பதற்கு முன்பிருந்த அறிவியலாளர்களும் அதிசயிக்கத்தக்க அறிவிற்கு, அறிவியல் துறைக்குப் பெருமை தேடித் தந்தவர் ஐன்ஸ்டைன்.

விஞ்ஞானம் என்றால் என்ன? என்பதற்கு ஐன்ஸ்டைன் தந்த விளக்கம் மனித நேயமிக்கதாக இருந்தது என்பது மட்டுமல்ல; அவருக்கு முன்பு அத்துறையிலே அரும்பெரும் சாதனைகளைக் கண்டறிந்த அனைவரையும்விட உயிராபிமானமிக்கதாக விளங்கியது என்றே கூறலாம். அவர் கூறுகிறார் :

“அறிவியலாவது, மனிதனிடம் உள்ள மனித நேயத்தை, மனிதாபிமானத்தை, மனிதத் தன்மையை, நாளுக்கு நாள் விரிவுபடுத்தி, அவனுக்கு மென்மேலும் ஆன்ம விடுதலை தருவதாகவும், அவனுடைய அறிவானது இயற்கையோடு ஒன்றி, ஒருங்கிணைந்து விரிவுபடுத்தி வியனுலகை ஆட்சி செய்யும் ஆற்றலை வழங்குவதாகவும், இந்த உலகில் பிறந்த மனிதன் தனது உற்றார் உறவோடும், சுற்றத்தோடும் எவ்வாறு மகிழ்ச்சியாக வாழ்வது என்பதைப்போதிக்கும் அறிவாகவும் திகழ வேண்டும்” என்று ஐன்ஸ்டைன் நமக்கு அறிவு புகட்டுவது வியப்பிற்குரியதாக உள்ளது.