பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

ஆழ்கடலில்


இல்வாழ்க்கை என்பதற்கு நேரே அறம் எனவுங்கூட எழுதிவைக்கலாம். இதற்கு நிகண்டு போன்றதொரு சான்று, 'அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை ' என்பதே.

'அறன் எனப்பட்டதே' என்பதின் இறுதியிலுள்ள 'ஏ' துறவறத்தினின்று இல்லறத்தைப் பிரித்துக் காட்டும் பிரிநிலை ஏகாரம் ஆகும் எனப் பொருள் கொண்டு, 'அஃது' என்ற சொல்லுக்கு 'அந்தத் துறவறமும்' எனப் பொருள் கூறியுள்ளார் பரிமேலழகர். ஏகாரத்தைத் தேற்ற ஏகாரமாகக் கொள்ளின் இந்தக் குழப்பத்துக்கு இடமில்லை. 'அஃது' என்னும் சுட்டு எவ்வாறு துறவறத்தைக் குறிக்க முடியும்? முதலில் இல்வாழ்க்கையைக் கூறி, பின்பு அது என்று சுட்டிக்காட்டினால் எது என்று எண்ணுக.

இல்வாழ்க்கையில் இருந்து கொண்டுதான் எல்லா அறமும் செய்ய முடியுமாதலின் 'அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை' என்றார். இல்வாழ்க்கையே அறம் எனத் தேற்றப்படுத்திக் கூறிவிட்டதால், குடும்பத்தில் இருந்து கொண்டு எவ்வளவு கொடுமை வேண்டுமானாலும் செய்யலாமா? பிறர் பழிக்காதபடி நடந்துகொண்டால் தானே நல்லதாகும் என்பதை அறிவிக்கவே 'பிறன் பழிப்பதில்லாயின் நன்று' என்றார் ஆசிரியர். இங்கே 'பழிப்பது' என்னுஞ் சொல்லுக்கு, பழித்தலுக்குரிய தாழ்ந்த குலத்து மனைவி எனப் பொருள் எழுதியுள்ள மணக்குடவருக்கு நமது. கழிபேரிரக்கம் உரித்தாகுக!