உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

ஆழ்கடலில்


செத்தவருக்கு எவ்வளவு படையல்கள் - வழிபாடுகள் நடக்கின்றன தெரியுமா? செத்துப்போன கெட்டவனையும் சமூகம் மதித்துத் தெய்வமாக ஏற்றுக்கொள்ளுகிறது எனில், 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் தெய்வத்துள் வைக்கப்படும்' என்று வள்ளுவர் சொல்லியிருப்பதில் என்ன தவறு? என்ன தடையிருக்க முடியும்?

தெய்வங்கள் மண்ணுலகில் நம் நடுவே வெளிப்படையாய்க் காணப்படாமையின், அவை விண்ணுலகில் எழுந்தருளியிருக்கக் கூடும் என்ற மக்களின் எண்ணத்தை எதிரொலிப்பவர்போல் 'வானுறையும் தெய்வம்' என்றார் வள்ளுவர். அவன் வானத்துக்குச் சென்ற பிறகுதான் தெய்வமாவான் என்பதில்லை; வாழ்வாங்கு வாழுமவன் வையத்துள் இருக்கும்போதே கூட தெய்வமாக மதிக்கப்படுவான் என்ற குறிப்புப் பொருள் 'வையத்துள் ... ... வைக்கப்படும்' என்பதிலிருந்து கிடைக்கின்றதல்லவா?

வாழ்வாங்கு வாழ்பவன் என்று கூறியுள்ளாரே -- வாழ்வாங்கு வாழ்தல் என்றால் என்ன? இல்லறத்தான் இப்படி இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று இத்தனை குறள்களில் கூறி வந்தாரே - இன்னும் எத்தனையோ குறள்களில் கூறப்போகிறாரே, அப்படியப்படி யெல்லாம் நடந்து கொள்வதுதான் 'வாழ்வாங்கு வாழ்தல்' என்பது. இயற்கை நியதியின்படி இல்லறத்தில் வாழ்வதே வாழ்வாங்கு வாழ்தல் தானே! இல்வாழ்க்கையின் முற்ற முடிந்த தனிப்பெருஞ் சிறப்பு. இந்தக் குறளில் கூறப் பெற்றுள்ளது.