பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆணிமுத்துகள்
39
 

புகழும் விரைந்து உலக முழுவதும் பரவி அவரை விளக்குவதால், அப்புகழுக்கு ஒளியென்னும் பெயர் தரப்பட்டது. போலும், எனவே, இந்நான்கும் உடையவனது புகழ் உலக நாடுகள் அனைத்திலும் பரவும் என்பதும் போதருகிறது. வேந்தர்க்கு ஒளி என்பது அதுதானோ?

பழைய உரையாசிரியர்கள், இக்குறளில், "உடையானாம்" என்பதன் பின்னுள்ள 'ஆம்' என்பதை 'ஒளி' என்பதன் பின் நிறுத்தி, "உடையான் வேந்தர்க்கு ஒளி ஆம" என மாற்றிப் பொருள் கண்டுள்ளனர். இம் முறையை நான் விரும்பவில்லை. "உடையானாம் வேந்தர்க்கு ஒளி" எனக் குறளில் உள்ளதுபோலவே கொள்வதுதான் தகுதி "உடையானாம்" என்பதிலுள்ள "ஆம்" என்பது. உடையவன் தான் - உடையவனே என்ற உறுதிப்பொருளை - தேற்றப் பொருளை - வலியுறுத்தற் பொருளை அழுத்தம் திருத்தமாக அறிவித்து நிற்கிறது . அதாவது "நான்கும் உடையவனே வேந்தர்க்கு ஒளி" எனப் பொருள் காணவேண்டும். இந்த அரும் பெருஞ் சொல்லாட்சியுள் அடங்கியுள்ள அந்நுண் பொருள் அழகினை "உடையானாம் வேந்தர்க்கொளி - உடையானாம் வேர்தர்க்கொளி" என்று சொல்லிச் சொல்லிப்பார்த்தால் உணர்ந்து துய்க்கலாம்.

இன்னும், இக்குறளில் உள்ள 'கொடை' என்னும் சொல் பழைய உரையாசிரியர்களை ஓர் உலுக்கு உலுக்கியிருக்கிறது. என்னென்று காண்போம். அரசனுக்குக் 'கொடை' வேண்டுமென இக்குறளிலும் ஈகைவேண்டுமென அடுத்து வரப்போகும் குறளிலும் வள்ளுவர் கூறியுள்ளார். பார்த்தார்கள் உரையாசிரியர்கள் ஒரு குறளிலே 'கொடை'; மற்றொன்றிலே 'ஈகை;' ஆனால் இரண்டும் ஒன்று தானே! இதற்கு எவ்வாறு பொருள் காண்பது என்று நினைத்திருக்கிறார்கள். மணக்குடவரோ, கொடை என்பதற்கு - 'தளர்ந்த குடிக்கு விதை ஏர்