பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6
ஆழ்கடலில்
 


இங்கேதான் பார்த்துப் பதிலிறுக்கவேண்டும். கனிவாய் இன்பத்துக்கு எதனை உவமையாக்குவது? "பழகப் பழகப் பாலும் புளிக்கும்" என்கின்றனரே! பாலே-தீம் பாலே இத்தகையது எனின் வேறு எத்தகைய இனிப்புப் பொருளை ஈண்டு இயம்புவது? அப்பழமொழியே சொல்லுகிறதே. 'பாலும்' என்பதிலுள்ள - உயர்வு சிறப்பு உம்மையே தெரிவிக்கிறதே. நாடோறும் நமக்கு நல்லுணவாகின்ற பாலுமே புளிக்கும் என்றால், பின்னைப் பேசுவானேன்?

கனிவாய் இன்பத்துக்கு ஒர் உவமை கூற இவ்வளவு திண்டாட்டமா? திணறலா? திக்குமுக்காடலா? அவன் அக்கனிவாய் இன்பினை நுகர்ந்தவன் ஏதேனும் உவமை கூறியிருக்கின்றானா? ஆம், கூறியிருக்கின்றான். ஒன்றன் சிறப்பை உணர்த்துதற்கு உவமை கூறுவதென்றால் அதனினும் சிறந்த பொருளை எடுத்துக் கூறுதல்தானே மரபு? நன்கு சுடர் விடும் விளக்கு ஒன்றிற்கு மின்மினியையா ஒப்பிடுவது? கதிரவனைப் போல் ஒளிர்கிறது இவ்விளக்கு, எனல்தானே உவமையியல்?

ஆயின், கனிவாய் இன்பத்துக்கு அவன் என்ன உவமை-ஒப்புமை கூறியுள்ளான்? தமிழர்களே, நம்புவீர்களா? அவன் கூறியிருப்பதை நம்புவீர்களா? அன்றைய தமிழன் தன் பட்டறிவிற்கு எட்டியதைச் சொன்னான். ஆனால் இன்றைய தமிழனோ, அதனைப் புரிந்துகொள்ளும் நிலையில்-நம்பக்கூடிய நிலையில், தன்னுணர்ச்சி உடையவனாய்-தன்னம்பிக்கை உடையவனாய் இல்லை. அந்தோ தமிழகமே! நீ அளியை! நீ நல்லை! நீ வாழ்க!

அவன் அப்படி என்ன சொல்லியிருக்கிறான்? என்ன உவமை கூறியிருக்கிறான்? "தேருந்தோறும் தேருந்தோறும் ஆராயுந்தோறும் ஆராயுந்தோறும் இனிக்கின்ற செந் தமிழைப் போல, இவள் செங்கனிவாய் ஆருந்தோறும்