பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. உலகப் பெருவடிவம்

42


ஆழ்வார்களின் தத்துவ தரிசனம்


ஆழ்வார்களின் இனிய பாசுரங்கள் மூலம் அவர்களுடைய தத்துவ தரிசனத்தை நாம் காணமுடிகிறது. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் அதாவது இந்தப் பேருலகம் இந்தப் பேரண்டம் முழுவதும் இயற்கையாகும். இதில் அடங்கியுள்ள பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகாயம் ஆகியவைகளும் இருகோள்களான சூரியனும் சந்திரனும், இதர கிரகங்களும் சுடர்களும், இப்பூவுலகில் பஞ்சபூதங்களின் பலவேறு சேர்க்கையினால் ஆன பலவகையான எண்ணற்ற உயிர்ப் பொருள்களும் சடப் பொருள்களுமான தாவரங்கள், பறவைகள், விலங்குகள், மனிதன், கல்மண், கனி, கடல், கடல்வாழ் உயிரினங்கள் முதலிய அனைத்தும் கண்ணுக்குப் புலப்படுபவவை புலப்படாதவை, ஐம்புலன்களான மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவகைளால் உணரப்படுபவை, அறிவால் அறியப்படுவன, ஆராய்ச்சி மூலம் கண்டு கொள்ளப்படுவன, முதலிய சகலவிதமான பொருள்களும் அவைகளின் அசைவுகளும் செயல்பாடுகளும் அச்செயல் பாடுகளுக்கான காரணங்களும் அவைகளின் விளைவுகளும் ஆகிய அனைத்துமே திருமாலின் திருவடிவமே, திருமாலின் செயல்களே என்பது ஆழ்வார்களின் தத்துவ தரிசனமே என்பதை அவர்களுடைய குறிப்பிட்ட பாசுரங்களால் நாம் அறிகிறோம்.

ஆழ்வார்கள் தங்கள் ஆழ்ந்த பக்தியின் மூலம் தங்களுடைய சீரிய கருத்துக்களைத் தங்களுடைய இனிய பாடல்களை பாசுரங்கள் மூலம் மக்களை ஈர்த்துத்தங்கள் தத்துவ தரிசனத்தின் மூலம் மக்களை விழிப்படையச் செய்திருக்கிறார்கள். இந்த பக்தி மார்க்கம், ஒரு இயக்கமாக மக்களின் ஒரு பேரியக்கமாக வளர்ந்து பெரிய பெரிய திருவிழாக்களாக, இசை விழாக்களாக மலர்ந்து மக்களுடைய உணர்வையும் ஒற்றுமையையும் வளர்த்து அம்மக்களின் உணர்வு நிலையை, அறிவுத் தெளிவை, உயர்த்தியிருக்கிறது.