பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன்

61


வெளிப்படுகிறான். இருள் அகன்று உலகெலாம் ஒளி பரவத் தொடங்குகிறது. எண்ணற்ற பலவகைப் பறவையினங்கள் பாடிக் கொண்டு கூட்டம் கூட்டமாக வானத்தில் பறந்து செல்கின்றன. வயல் வெளிகளில் உள்ள பசுமையான நெற்பயிர்கள் எல்லாம் அசைந்தாடிக் கொண்டு சூரிய ஒளியின் பக்கம் சாய்கின்றன. மரங்களிலும், செடிகளிலும், கொடிகளிலும் உள்ள மலர்கள் எல்லாம் சூரிய ஒளி பட்டவுடன் மலர்ந்து விரிந்து மணம் பரப்பத் தொடங்குகிறது. தடாகங்களிலும் இதர நீர் நிலைகளிலும் உள்ள தாமரை, அல்லி மலர்களெல்லாம் மலர்ந்து விரிந்து அசைந்தாடத் தொடங்குகிறது. வண்டுகளும் தேனிக்களும் மலர்களைச் சுற்றிக் கொண்டு வந்து தேனைப்பருகி, மதுவுண்ட மயக்கத்தில் ஆடத் தொடங்குகிறது. உலகமே விழிப்படைந்து அசைந்து செல்லத் தொடங்குகிறது. எங்கும் உயிர்த் துடிப்பு ஏற்பட்டு, அனைத்தும் அசைந்தாடத் தொடங்குகிறது.

ஆயர்கள் குழல் ஊதிக் கொண்டு தங்கள் ஆடுகளையும் மாடுகளையும், எருமைகளையும் பசுக்களையும் ஒட்டிச் செல்கிறார்கள். அந்த ஆவினங்களின் கழுத்துகளில் தொங்கும் மணியோசை காலைக் காற்றில் அலை அலையாகச் சென்று கொண்டிருக்கிறது. ஆயர்பாடி மங்கையர் தயிர் கடைந்து ஒலி பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆயர்குலப் பெண்கள் தங்கள் பாற்குடங்கள், தயிர்க்குடங்கள், மோர்க்குடங்களைத் துக்கிக் கொண்டு ஊருக்குள் சென்று கொண்டிருக்கிறார்கள்.

உழவர்கள் தங்கள் மாடுகளை ஒட்டிக் கொண்டு வயல் வெளிகளை நோக்கிச் செல்கிறார்கள். காலைக் காற்று சிலீரென வீசுகிறது. ஆதவனின் இளவெயில் பட்டு, மரங்களும், செடிகொடிகளும், வயல் வெளிகளும், கூடுகளும், குடிசைகளும் ஒளிவீசத் தொடங்குகின்றன. உலகின் அனைத்து உயிர்களும்