பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

     கொழிக்கும் பூந்தோட்டத்திருந்து
     குப்பை கூளம் அகன்றுவிடும்
     காலம் கனிந்து வருகிறது,
     குமைந்து தம்மை இழப்பவர்கள்
     பொழிவார் தங்கள் குருதியினைப்
     பூக்கள் ஆகும் உயிரூற்றே,
     புலரும் அந்தப் புத்துணர்ச்சிக்
     காலம் விரைந்து வருகிறது.
     விழிப்பாய் நிறத்தைக் கண்டிடுவாய்
     விரியும் சிவப்பும் கறுப்பும்காண்
     வியக்கும் பரிதி உதயத்தை
     விளம்பும் விடியல் பேரொளி பார்!

     பூவின் அரும்பில் இருக்குமணம்
     போல்ஏன் சிறைப்பட்டிருக்கின்றாய்?
     பூரித் துவந்து பரவிவிடு!
     புறப்பட்டெங்கும் கலந்துவிடு!
     காவின் தென்றலுடன் கூடிக்
     காற்றுலாவும் இடம் எங்கும்
     கமழ்ந்து கலந்து புகுந்திடுவாய்,
     கருதும் அணுவாய் இருந்தாலும்
     யாவும் வீழும் பெரும்பாலை
     வனமாய் எங்கும் மாறிவிடு;
     அலையும் இளங்காற்றாகிய நீ
     ஆற்றல் புயலாய் ஓங்கிவிடு!
     தூவும் அன்பின் வன்மையினால்
     துடிக்கும் உண்மை உணர்ச்சியினால்
     துகளை யெல்லாம் உயர்வாக்கு,
     புகழின் முகட்டில் துரக்கிவிடு!
     தேவ தூதன் திருப்பெயரைத்
     திருந்து வாழ்க்கைச் செய்தியினைத்
     திசையனைத்தும் ஒளிரச்செய்
     செம்மை யாகும் இவ்வுலகே!

56