உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

117

கொண்டு வாழ்கின்றனர். வங்கிகள் முன்பணம் தந்து கடனுதவி செய்து பொருள்கள் வாங்க உதவி செய்கின்றன. பொருள்கள் மக்கள் வாங்கினால்தான் உற்பத்திப் பெருக்கம் செய்ய முடியும்; தொழில் வளம் பெருகும் அங்கே இருப்பவர்களுக்கு வாங்கும் சக்தி அதே சமயத்தில் பெருகுகிறது; உறுதியான வாழ்க்கை நிலை உள்ளது.

அவர்களைப் போல் நாமும் கார்கள், வீடியோக்கள் டெலிவிஷன்கள் ஒரு புறம் பெருக்கும் தொழிலில் அண்மைக்காலத்தில் ஈடுபட்டு வருகிறோம். மக்களிடமும் வாங்கும் சக்தி ஓரளவு பெருகி வந்துள்ளது. உயர்மட்டத்து வாழ்நிலை உடையவர்கள் அந்த வசதிகளை அனுபவிக்கத் தொடங்கிவிட்டனர், அந்தத் தேவைகளுக்கு வெளிநாடுகளில் இருந்து ‘எலக்ட்ரானிக்’ பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அதனால் நம் நாட்டுப் பொருளாதாரத்தில் ஓரளவு சரிவு ஏற்படுகிறது. நம் பொருள் சக்தி வெளி நாட்டுக்குப் பயன்படுகிறது. இப்பொழுது அவை நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படவில்லை; கூட்டுவிக்கப்படுகின்றன. ஓரளவு இங்கே தொழில் பெருக்கமும் ஏற்பட்டு வருகிறது.

அந்நிய நாட்டுச் செலாணியை மிச்சப்படுத்த, குறைக்க இங்கே பல துறைகளிலும் நாம் தொழில்வளத்தை பெருக்க வேண்டும். அதே சமயத்தில் எந்திரமயமாக்குவதில் பயங்கரமான தீமைகளும் உள்ளன. உற்பத்திப் பெருக்கம் ஏற்படலாம்; எந்திரங்களைக் கொண்டு துரிதமாக வேலைகளைச் செய்து முடிக்கலாம்; ஆள் குறைப்பும் வேலை இல்லாமையும் உடனுக்குடன் ஏற்படுகின்றன, முடிவு: ஒரு பக்கத்தில் வசதி மிக்கவர்கள் தம் தேவைகளைப் பெற்று வாழ்கிறார்கள்; அற்றவர்கள் வாழ வகையின்றித் தவிக்கின்றனர். இந்தப் பிரச்சனையைச் சந்திக்காதவரை ஒழுங்கீனங்களையும் சட்ட விரோதமான சமூக விரோத செயல்களையும் சந்தித்துத்தான் ஆக வேண்டும்.