பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

அதே போல மற்றொன்றையும் விமரிசிக்க வேண்டியுள்ளது. திரைப்படங்களில் கஷ்டப்பட்டுக் காதல் காட்சிகளைப் புகுத்துகிறார்கள். மறைவு நிகழ்ச்சிகளை அம்பலப் படுத்துவது ஒப்புக்கொள்ள முடியாத ஒன்று. கலை என்பதே குறிப்பாக வெளிப்படுத்துவதில்தான் சிறப்பு இருக்கிறது. சில குறிப்புகள் தந்தால் போதும்.

நாடகங்களில் இவ்வாறு வெறும் குறிப்புகள் தந்தால் போதும்; திரைப்படங்களில் அவ்வாறு செய்ய முடியாது: கருத்தைவிட காட்சிகளுக்குத் திரைப்படம் முதன்மை தருகிறது. அதனால் இக்காட்சிகளை மிகைப்படுத்திக் காட்டுவது மரபாகிவிட்டது. நடனக் கலை காதல் காட்சிகளை ஆக்கிரமித்துக் கொள்கிறது. தமிழ்ப்படத்தைவிட தெலுங் குப் படத்தில் இவை மிகுதி, தமிழ்ப்படங்கள் இவற்றி னின்று மெல்ல மெல்ல விடுபட்டுக் கொண்டு வருகின்றன.

ஆங்கிலப் படங்கள் இவ்வளவு சிரமம் எடுத்துக் கொள்வதில்லை. அவர்களுக்குப் பாடவும் ஆடவும் மிகுதியும் வாய்ப்புள்ளது. காதற் காட்சிகளில் அவற்றைத் திணிக்க வேண்டும் என்ற தேவை ஏற்படுவதில்லை. அக்காட்சிகள் நடைமுறை ஒட்டி இயல்பாக அமைகின்றன. தைரியமாக இருவர் ஒன்றாக ஆகின்றனர். நாட்டு அங்கீகாரத்தை ஒட்டி முத்தக் காட்சிகளும் இடம் பெறுகின்றன.

பொது இடங்களில் காதல் செய்வோர் அதை வெளிப்படுத்த, செயல்முறைப்படுத்த அணைத்துக் கொள்ளுதலும் முத்தமிடுதலும் நடைமுறை நிகழ்ச்சிகளாக இருக்கின்றன. அதைவிட, அவற்றை யாரும் கவனிப்பதே இல்லை என்பது வியப்புக்கு உரிய செய்தி. இங்கே, காதலிப்பதே யாருக்கும் தெரியாமல் செய்ய வேண்டியுள்ளது. அடுத்த நிகழ்ச்சிகள் அதைப் பற்றி விமரிசிக்கத் தேவை இல்லை. அதை யாரும் அனுமதிப்பதும் இல்லை. இத்தகைய நிகழ்ச்சிகள் குற்றவியல்களாகக் கருதப்படுகின்றன. எனவே, திரை உலகமும் அதன்படி நடந்துகொள்ள வேண்டியுள்ளது.