பக்கம்:இட்ட சாவம் முட்டியது.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

— 10 —

நடைமுறைகளைக் கையாள்வது, சட்டமன்ற, நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் மாநில, அனைத்திந்திய எதிர்க்கட்சித் தலைவர்களையும் பெருவிலை கொடுத்து வாங்குவது, தங்களுக்கு மாறான — அடங்கிப் போகாத — மாநில அரசுகளைக் கவிழ்ப்பது, ஆளுநர்களை மாற்றுவது, திரும்பப் பெறுவது, ஒரு புரட்சி அமைப்பைக் கொண்டே இன்னொரு புரட்சி அமைப்பை அழிப்பது இன்னோரன்ன அரசியலுக்கும் அறிவியலுக்கும் பொருந்தாத தில்லுமுல்லு, ஏமாற்றுத் தகிடுதத்தப் பித்தலாட்டப் புனை சுருட்டு முறைகள் எல்லாம், இந்திரா தலைமையமைச்சராகப் பதவியேற்ற காலத்திலிருந்து தான் தொடங்கின என்பதைச் சிறிது அரசியலறிவு கொண்டவர்களும் விளங்கிக் கொள்ளாமற் போக முடியாது; மேனிலை அரசியல் அறிவு உள்ளவர்களும் மறுக்க முடியாது. அரசியலுக்கே மாறுபட்ட, சூதாட்டத்தனமான, சூழ்ச்சி நிறைந்த, கரவான இந்திராவின் இத்தவறான கொடுமையான நடைமுறைக ளுக்கெல்லாம் ஏராளமான சான்றுகள் உள்ளன. அவற்றை யெல்லாம் இங்கெடுத்துக் கூறுவதானால், இவ்வேடு இடங்கொள்ளாது. எடுத்துக்காட்டாக, அவர் காலத்தின் தாறுமாறான நடவடிக்கைகளில் ஒன்றிரண்டை மட்டும் காட்டுவோம்.

இந்திரா செய்த கொடுமைகள்!

1984-இல் இந்திராவின் தேர்தல் விளம்பரத்திற்காக மட்டும், அவரின் தொகுதி ஒன்றிற்கு 10 முதல் 20 இலக்கம் உருவா வரை செலவழிக்கப்பட்டது. அவ்வகையில் மொத்தம் ஏறத்தாழ 100 கோடி உருவாவைச் செலவிட்டார். இத் தொகை இந்திய முதலாளிகளிடமிருந்து பெற்ற கருப்புப் பணம். இதற்குக் கைம்மாறாக, அவர் ஆட்சிக்கு வந்ததும் பெரும் முதலாளிகள் கொள்ளை ஊதியம் பெற, அரசியல் தடுப்புக் கதவுகளை அவர்களுக்குத் தாராளமாகத் திறந்து விட்டார், இந்திரா.