பக்கம்:இட்ட சாவம் முட்டியது.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

— 11 —

இந்திரா, 1966 முதல் 77 வரையில் 11 ஆண்டுகளும், மீண்டும் 80 முதல் 84 வரை 5 ஆண்டுகளும், ஆக ஏறத்தாழ 16 ஆண்டுகளும் அதிகாரத்தில் இருந்தார். 1975 - சூன் 26 முதல் 1977 பிப்பிரவரி முடிய நெருக்கடி நிலையை இந்திரா அறிவித்திருந்தார். இக்காலகட்டத்தில் அவர் ஓர் அனைத்ததிகாரியை (சர்வாதிகாரியை)ப் போலவே நடந்து கொண்டார். அக்கால் நடந்த அரசியல் அட்டூழியங்களைப் போல இந்திய அரசியலில் வேறெந்தக் காலத்திலும், வேறெவரும் மக்களுக்குச் செய்யவில்லை. ஏறத்தாழ 50 ஆயிரம் பேர் நாடு முழுவதிலும் சிறை வைக்கப்பெற்றனர். தேசாய், செயப்பிரகாசு நாராயண் போன்ற பெரும்பெருந் தலைவர்கள் எல்லாரும் சிறைக்குள்ளே தள்ளப்பெற்றனர். ஏறத்தாழ நாடு முழுவதிலும் உள்ள எல்லாத் தீவிர எதிர்க்கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் சிறைக்குள் ஓராண்டுக் காலம் இந்நூலாசிரியர் உள்பட, வாடி வதங்கினர். பேச்சுரிமை, எழுத்துரிமை, செய்தித்தாள் உரிமைகள் முதலிய மக்கள் நல உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டுவிட்டன. மக்களில் எவரும் எது பற்றியும் 'ஏன்' 'எதற்கு' என்று கேட்கவும் அஞ்சினர். ஒவ்வொரு நாளும் மக்கள் 'வெருக்' 'வெருக்' என்று அஞ்சி நடுங்கிச் சாகாமல் செத்துக் கொண்டிருந்தனர்.

அந்நெருக்கடி நிலைக் காலத்திலும், அவர் தலைமை அமைச்சராகப் பொறுப்பிலிருந்த பிற காலகட்டத்திலும் இந்தியாவின் அரசியல், பொருளியல், குமுகவியல், அறவியல் (நீதியியல்), ஆட்சியியல், நாடாளுமன்ற, சட்டமன்ற நடவடிக்கைகள் முதலிய அனைத்தும் சீர்குலைந்தன. தாறுமாறாகச் சிதறுண்டன; முன்னேற்றம் தடைப்பட்டது. அரசியலில் குற்றவாளிகளும், கொடுமைக்காரர்களும் கொள்ளையரும், திருடர்களும் உட்புகுந்தனர். ஆட்சியாளர்களோடு கைகோத்துக் கொண்டனர்.

— கோடி கோடியாய்க் கொள்ளை அடிப்பவர்கள்