பக்கம்:இட்ட சாவம் முட்டியது.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

— 29 —

தலைவர்களுக்கும், செயலலிதா போலும் கவர்ச்சியும் கரவும் சூழ்ச்சியும் ஏமாற்றும் பழிவாங்கும் உணர்வும் கொண்ட தலைவர்களுக்கும், நேர் எதிராக மக்களைத் திரட்டிப் புரட்சி செய்வதே மிகச் சரியானதும், வலிவானதுமான ஓர் அணுகுமுறையாகும். இவ்வாறல்லாத இனவுரிமை மீட்புக்கு 'முண்டையின் மகனே' போலும் அறப்பாடல்களை எழுதியே மறப்போர் நிகழ்த்தி விட முடியாது. இம் மெய்யறிவான நிகழ்வுகளில் மாந்தவியல் கோட்பாடு முனைமழுங்கிப் போகும்; அறிவியல் மெய்ம்மம் இழுக்குற்றுத் தாழும்; மாந்தர்களிடம் வெறுமையும் ஏக்கமும் எதிர்பார்ப்பும் மடிமையும் பகுத்தறிவின்மையும் ஆழக் குடிகொண்டு விடும்.

கற்பி, ஒன்றுபடுத்து, போராடு:

எனவே, மக்களை எழுச்சியுறச் செய்யும் முயற்சியில் தமிழின முன்னேற்ற உணர்வு நிலை, அறிவு நிலை, கொள்கை நிலை, செயல் நிலைத் தொண்டர்கள் மிக ஆழமாகவும் அகலமாகவும் கவனமும் கருத்தும் கொள்ளுதல் வேண்டும். இவ்விடத்தில் அண்ணல் அம்பேத்கர் மக்களுக்கு அளித்த கற்பி, போராடு, ஒன்றுபடுத்து என்னும் மூன்று முனைப்புணர்வுப் படிநிலைகளையும் (Evolution) சிறிதே மாற்றியமைத்து, கற்பி (Educate), ஒன்றுபடுத்து (Organise), போராடு (Agitate) என்று முறைகொண்டு, செயல் படுத்துதல் வேண்டும்.

மக்களுக்குக் கற்பிப்பது மிக மிக இன்றியமையாதது. கற்பிக்க வேண்டியதில் முகாமையானது கல்வி மட்டுமன்று; நல்லுணர்வும் ஆகும். நல்லுணர்வுதான் விழிப்புணர்வைத் தரும். இவ்வுணர்வைத்தான் இன்றைய அரசியல் கட்சிகள் மக்களுக்கு ஊட்ட விரும்புவதில்லை. ஏனெனில் மக்கள் விழிப்படைந்து விட்டால் தங்களின் ஏமாற்றுகள், சூழ்ச்சிகள், சூதுகள், போலியும் பொய்ம்மையும் நிறைந்த கரவான நடவடிக்கைகள் முதலியன அவர்களுக்கு விளங்கிவிடுமே,