பக்கம்:இட்ட சாவம் முட்டியது.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை:

கலையோ, இலக்கியமோ கலைக்கானதோ, இலக்கியத் திற்கானதோ அன்று. அவை மக்களுக்கானவை - மக்கள் வாழ்க்கைக்கானவை.

உரோம் நகரம் பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது கின்னர(பிடில்) இன்னிசை இசைத்துக் கொண்டிருந்தவன் சிறந்த கலைஞனாக எண்ணத் தகுந்தவன் அல்லன்.

ஒரு நாட்டில் மக்கள் அவலங்கள் தாண்டவமாடிக் கொண்டிருக்கையில், அவற்றைக் காணவோ, உணரவோ தம் கலை இலக்கிய வடிவங்களின்வழி வெளிப்படுத்தவோ மறுத்து - அழகியல் உணர்வில் இயற்கையையும், இவ் வாளுமைக் குமுகத்தில் அடிமையாக்கப்பட்டுள்ள பெண்ணை அழகுப் பொருளாய் வண்ணித்தும் பாடிக் கொண்டிருப்பவன் கலைஞனாகவோ, இலக்கியப் படைப்பாளியாகவோ ஆகிவிடமாட்டான்.

அத்தகைய இலக்கிய எழுத்தர்கள் ஆளுமையர்களின் நலனுக்கானவர்களே அல்லாமல் மக்களின் நலனுக்கானவர்கள் அல்லர்.

தமிழ் இலக்கியத்தைப் பொறுத்த மட்டில் அவ்வகையில் மக்கள் நலனுக்கான இலக்கியப் படைப்பாளிகளை விரல் விட்டு எண்ணுவதுகூடக் கடினமே.

இயற்கையையும், கடவுளையும், காதலையும் தம் உயர் எழுத்தாற்றலால் எழுதிக் கொட்டியவர்களே அதிகம். தமிழக மக்களின் அடிமைத்தனத்தையோ, அவர்களுக்கான விடுதலையையோ உள்ளடக்கமாகக் கொண்ட இலக்கியங்களைக் காண்பது என்பது குதிரைக் கொம்பாகவே உள்ளது.

ஒவ்வொரு விடுதலைப் போராட்ட நாட்டிலும் அவ்வந்நாட்டு மக்களின் விடுதலைக்கான இலக்கியங்கள் ஏராளமாய் வளர்ந்தன. ஆனால் தமிழகம் இலக்கிய அளவிலும் இருண்டே கிடக்கிறது.

அவ்விலக்கிய இருட்டில் மின்னும் சில விண்மீன்க