பக்கம்:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42



இத்தகைய மனுவொன்று போடப்பட்டிருப்பதை யொட்டி நீதிமன்றமானது கட்டுரையின் தனித்தனியான அரைகுறைப் பகுதிகளிலோ சொற்றொடர்களிலோ சொற்கோர்வைகளிலோ முழுக்கவனத்தையும் செலுத்தாது கட்டுரை முழுவதையும் நேர்மையான முறையில் விருப்பு- வெறுப்பின்றி நடுநிலைமையில் நின்று படித்துத் தெளிந்து ஒரு முடிவுக்கு வரவேண்டியது அவசியமென்பது வெளிப்படை. அப்பத்திரிகையைப் படிக்கக்கூடியவர்களுக்கு மேற்படி முழுக்கட்டுரையும் விளைவிக்கும் பொதுவான தன்மை எதுவாக இருக்கக்கூடுமென்பதை நீதிமன்றம் யோசித்துத் தீர்மானித்தல் வேண்டும். வார்த்தைகள் ஜோடனையும் -- புனைந்துரையும் -- மிகைபடக்கூறலும் -- வேகத்தைக் கிளப்பக்கூடிய எழுத்து வீச்சும் கவனிக்கப் பெறவேண்டியவையே; ஆனாலும்கூட, அவற்றைக் கொண்டுமட்டுமே கட்டுரையொன்று யாதொரு சட்டத்தின் வரையறைக்குள் வந்துவிடுகிறதென சொல்லிவிடுதல் முடியாது.

சர்க்கார் உத்தரவின் அனுபந்தத்தில் மேலே குறிப்பிட்ட இரு தேதிகளில் வெளியான இரண்டு கட்டுரைகளிலிருந்து இருபகுதிகள் தரப்பட்டுள்ளன; முதல் பகுதி: "காந்திராம சாமியும்--பெரியார் ராமசாமியும்" என்று தலைப்பிடப்பெற்ற கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டதாகும். அது ஓரளவு நீண்ட கட்டுரையேயாகும்; ஆனால் சர்க்கார் உத்தரவு அனுபந்தத்தில் கட்டுரையின் சிற்சில பகுதிகளே தொகுத்துத் தரப்பட்டுள்ளன. முழுக்கட்டுரையின் போக்கையும் நாங்கள் கண்டோம்; சர்க்கார் சார்பில் வாதிக்க ஆஜராயிருக்கும் அட்வகேட் ஜெனரல்கூட அனுபந்தப் பகுதிகளைமட்டுமே வைத்து வாதாட வில்லை. இக்கட்டுரை எழுந்ததின் நோக்கம் என்னவென்பது தெற்றெனத் தெரிகிறது. 1948-ம் ஆண்டு ஏப்ரலில் சட்டசபை காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தேர்ந்தெடுக்கப்பெற்றதையொட்டியதே இக்கட்டுரை. அத்தேர்தலில் எதிர்த்து நின்ற அபேட்சகர் டி. பிரகாசம் ஆவர். ராமசாமி ரெட்டியாரின் நற்பண்பியல்புகளுக்குப் புகழுரை புகன்று, கட்டுரை ஆரம்பமாகிறது. "அத்தகைய ஒரு மனிதருக்கு எதிர்ப்பு இருப்பானேன்?"