பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

இந்தியாவில் - இதழியல் கலை! தோற்றம்! வளர்ச்சி! தொண்டு!


வாரன் ஹேஸ்டிங்ஸ் என்ற தலைமை ஆளுநர், சில ஒழுங்கு முறை வசதிகளைச் செய்து கொடுக்கத் திட்டங்களை வகுத்தார்!

இந்தியாவில் கிழக்கு இந்தியா கம்பெனியின் ஆட்சிக்கு மீண்டும் தலைமை ஆளுநராகப் பொறுப்பேற்ற வாரன் ஹேஸ்டிங்ஸ். 1818-ஆம் ஆண்டில் இந்தியப் பத்திரிகைகளை அச்சேற்றுவதற்கு முன்பு, செய்திகளைத் தணிக்கை செய்ய வேண்டும் என்றிருந்த கட்டுப்பாட்டைத் தளர்த்தினார்.

பத்திரிகை ஆசிரியர்களுக்குரிய சில பொறுப்புக்களையும், உரிமைகளையும் அவர் வழங்கினார். அவருக்குப் பிறகு வில்லியம் பெண்டிங் பிரபு அதே பதவிக்கு வந்தார். பத்திரிகைகள் அனுபவித்தக் கெடுபிடிகளைத் தளர்த்தி, இந்திய மொழிப் பத்திரிகைகள் வளர்ந்திட மேலும் வசதிகளைச் செய்தார்.

அவருக்குப் பிறகு ஆக்லண்ட் பிரபுவும், எல்லன் பரோ பிரபுவும், ஹார்டிங்ஸ் பிரபுவும், டல் ஹெளசி பிரபுவும் 1836 - ஆம் ஆண்டு முதல் 1856-வரை தலமை ஆளுநர் பதவிக்கு வந்தார்கள். இவர்களுக்குப் பிறகு 1855- ஆம் ஆண்டு இறுதியில் மெட்காஃப் என்ற தலைமை ஆளுநர் கொண்டு வந்த பத்திரிகைச் சட்டம், வங்கம், பம்பாய், சென்னை, இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் பத்திரிகைகள் வளர்ச்சி பெற்றிட வழிசெய்தது.

இந்தத் தலைமை ஆளுநர்களது ஆட்சிக் காலத்தில் அச்சு இயந்திரங்களின் வளர்ச்சி புதுப்புது வகையில் தோன்றி அச்சுக் கலை முன்னேற்றத்தில் ஒரு மறுமலர்ச்சி உண்டானதால், பத்திரிகைகள் வேகமாகவும், புதுப்புது மேல் நாட்டு நுட்பங்களோடும், செய்திகளை விரைவாகச் சேகரித்து அனுப்பும் வசதிகளும் பெருகின. அதே நேரத்தில் உலக நாடுகளின் பத்திரிகை வளர்ச்சிகளில் ஏற்பட்ட அச்சுக்கலை முன்னேற்றங்களும் நம்மிடையே ஒன்றிணைந்து புதியதோர் இதழியல் யுகமே உருவானது. அதனால், இந்தியப் பத்திரிகைகளும் மேல்நாட்டு பத்திரிகைகளோடு போட்டியிடும் வளர்ச்சியும் பெற்றன.