பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

இந்தியாவில் - இதழியல் கலை! தோற்றம்! வளர்ச்சி! தொண்டு!



விக்டோரியா மகாராணி அறிவிப்பின்படி Lord Canning கேனிங் பிரபு என்பவர் முதல் வைசியராய் Viceroy என்ற பொறுப்பை இந்தியாவில் ஏற்றதும், பத்திரிகைகள் மீது போடப்பட்ட கெடுபிடி உணர்வுகள் சிறிது தளர்ந்தன. அந்தச் சூழ்நிலையால் 1853 - ஆம் ஆண்டில் “இந்து பேட்ரியட்” Hindu Patriot என்ற பத்திரிகையை கிரிஸ் சந்திர கோஷ் என்பவரும், 1868 - ஆம் ஆண்டில் ஷஷிர்ல் குமார் கோஷ் என்பவரால் “அமிர்த பஜார் பத்திரிகா” (Amrita Bazzar Patrika) என்ற இதழும், பிரம்ம சமாஜி யான கேசவ சந்திர சென் என்பவரால் 1870ல் ‘சுலப் சமாச்சார்’ (Sulab Samachar) என்ற பத்திரிகையையும் அடுத்தடுத்து வெளியிட்டார்கள்.

ஒன்றன்பின் ஒன்றாக இவ்வாறு பத்திரிகைகள் வெளிவந்துக் கொண்டிருப்பதைக் கண்ட அப்போதைய வைசியராய் லார்டு லிட்டன் பிரபு, இந்திய மொழி பத்திரிகைகள் வளர்ந்தால், ஆட்சிக்கு ஆபத்து என்று எண்ணி, இந்திய மொழி பத்திரிகைகளைக் கட்டுப்படுத்திட 1878- ஆம் ஆண்டில் தாய் மொழிப் பத்திரிகைச் சட்டம் (The Vernacular Press Bill) என்ற ஒரு சட்டத்தை இயற்றினார். இந்தச் சட்டத்தை அப்போதைய பத்திரிகையாளர்கள் அனைவரும், ‘இது ஓர் அடக்கு முறைச் சட்டம்’ என்று கடுமையாக எதிர்த்தார்கள்.

லிட்டன் பிரபுவுக்குப் பிறகு வைசியராயாகப் பதவி ஏற்றிட்ட லார்டு ரிப்பன் “Lord Roppor” 1882 - ஆம் ஆண்டில் லிட்டன் பிரபு சட்டத்தை அடியோடு அகற்றினார். பத்திரிகைகளுக்கு மனிதாபிமான உரிமைகளை வழங்கினார். லார்டு ரிப்பன் எங்களப்பன் என்று பொதுமக்கள் புகழ்ந்து பேசுமளவுக்குப் பத்திரிகைகளும் அவரைப் பாராட்டின. ஆனால், அவருக்குப் பிறகு பதவி ஏற்ற லார்டு எல்ஜின் Lord Elgyn, மிண்டோ பிரபு, செம்ஸ்ஃபோர்டு ஆகிய வைசியராய்கள் ஆட்சிகளில் பழைய லிட்டன் பிரபு அடக்குமுறைகளே தொடர்ந்து நடந்து வந்தன.