பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

விடுதலைப் போரில் தமிழ் பத்திரிகைகள்


 கோகலே அணிக்கும், தீவிரவாதியான பாலகங்காதர திலகர் அணிக்கும் இடையே மூண்ட கொள்கைப் போராட்ட மோதல்களிலே, பேசும் மேடையில் பாதுகைகள், நாற்காலிகள், மேசைகள் ஆகியவற்றுக்கு இறக்கைகள் முளைத்து மேடை நோக்கி பறந்த பின்பு, அதே காங்கிரஸ் பேரவைகள் அடுத்தடுத்த ஆண்டுகளில் மிதவாதமும் இல்லாமல், தீவிரவாதமும் அல்லாமல் நடுநிலைவாதம் பேசும் இயக்கமாக மாறியதைப் போல, சென்னையிலும், 1905-ஆம் ஆண்டு முதல், காங்கிரஸ் இயக்கத் தேசியக் கொள்கை நிலைகள் சற்று மாறின!

சுதேசி இயக்கத்திற்கு ‘வந்தே மாதரம்’ என்ற பாடல் தாரக மந்திரமானது. God Save the King ஒழிந்தது. தீவிரவாத தேசீயத் தலைவரான மராட்டிய அரிமா பாலகங்காதர திலகர் அணியின் பலம் ஓங்கவே, தமிழ்நாட்டிலும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., தேசிய கவி பாரதியார், தமிழ்த் தென்றல் திரு.வி.க., கொள்கைச் சிங்கம் சுப்பிரமணிய சிவாவை ஒத்தவர்கள் சென்னைக் காங்கிரஸ் இயக்கத்தில் திலகரைப் பின்பற்றி தீவிரவாதிகளாகி, அவர்களது பத்திரிகை எழுத்துக்களும், பேச்சுக்களும், தீவிர விடுதலை உணர்ச்சியை உந்த விட்டது.

ஆனால், அகில இந்திய தேசியக் காங்கிரஸ் பேரியக்கத்தை நிறுவிய சென்னைத் தூண் போன்றவர்களில் ஒருவராக விளங்கிய சுதேசமித்திரன் பத்திரிகை ஆசிரியர் ஜி. சுப்பிரமணிய ஐயர், திலகரது தீவிரவாதத்தை ஆதரிக்க முடியாமல், கோபால கிருஷ்ணகோகலேயின் மிதவாதிகள் அணியிலேயே இருந்து விட்டதால், தேசிய கவி பாரதியார் 1906-ஆம் ஆண்டின்போது, ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையின் துணை ஆசிரியர் பணியிலே இருந்து விலகினார் பிறகு தான் ‘இந்தியா’ என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார்.

ஆங்கில அடக்குமுறை நாளுக்கு நாள் அதிகமாவதைக் கண்டு ஃபிரெஞ்சு ஆட்சிக்குக் கட்டுப்பட்ட புதுவை எனப்படும் பாண்டிச்சேரி நகருக்கு கவி பாரதி சென்றார். அங்கிருந்து ‘விஜயா’, ‘கர்மயோகி’ என்ற தமிழ்ப் பதிப்புப் பத்திரிகைகளை நடத்தி, முன்பைவிட காங்கிரஸ் இயக்கத்தின் விடுதலை உணர்வுக்குத் தீவிரமாகப் பணி புரிந்தார்.