பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

விடுதலைப் போரில் தமிழ் பத்திரிகைகள்




அரும்பெரும் தியாகியான வ.வே.சு. ஐயர் நடத்திய சேரமாதேவி குருகுலத்தில் பார்ப்பன மாணவர்கள், பார்ப்பனரல்லாத மாணவர்கள் இடையே உணவு பரிமாறும் சாதிபேதப் பாகுபாடுகள் வழக்கத்தை எதிர்த்து, சமபந்தி உணவு முறை பழக்கத்துக்கு வரவேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு பத்திரிகை மூலமாகச் சேவை செய்தார் டாக்டர் வரதராசலு நாயுடு!

தனது தமிழ்நாடு பத்திரிகையின் எழுத்து மூலமாய் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தைப் பலமாக, வளமாக உருவாக்கி, இந்திய நாட்டின் விடுதலைப் போருக்குரிய படைத் தளபதியாகப் பத்திரிகையைப் பயன்படுத்தினார். அதனால் பத்திரிகையாளர்களால் டாக்டர் வரதராசுலு நாயுடுவின் பத்திரிகைத் தொண்டை மறக்க முடியாமல், விடுதலைப் போருக்கு வீரம் மணந்த ஒரு பத்திரிகையாளராய் பத்திரிகை வரலாற்றில் இடம் பெற்றவராக இன்றும் வாழ்கின்றார்.

டி.எஸ். சொக்கலிங்கத்தின்

‘தினமணி, தினசரி, காந்தி!’

டாக்டர் வரதராசுலு நாயுடுவின் ‘தமிழ்நாடு’ பத்திரிகைப் பாசறையில் 1923-ஆம் ஆண்டு முதல் பயிற்சிப் பெற்றவர் திரு. டி.எஸ். சொக்கலிங்கம். அவர் 25 ஆண்டுகளுக்கு மேலாகப் பத்திரிகை உலகுக்கு உழைத்து, நாட்டுப் பற்றை மக்களுக்குள் உருவாக்கியவர். 1927-ஆம் ஆண்டில் ‘தமிழ்நாடு’ நாளேட்டிற்கு ஆசிரியராக அமர்ந்தார். 1931-ஆம் ஆண்டில் ‘காந்தி’ என்ற பத்திரிகையைத் துவக்கி அப்போதைய காலணா என்ற நாணய மதிப்பு விலைக்கு விற்பனை செய்தார். பிறகு வார இதழாக இருந்த அதை நாளேடாகப் பெரிய அளவில் மாற்றி வெளியிட்டார். அந்த ஏடு மக்கள் இடையே பெரிய வரவேற்பையும் செல்வாக்கையும் பெற்றுப் பரபரப்பாக விற்பனையானது.

பீகார் மாநிலத்தில் 1934-ஆம் ஆண்டில் பூகம்பம் ஏற்பட்டபோது, பிரிட்டிஷ் அரசு மெத்தனமாக இருந்ததால், ‘சர்க்கார் எங்கே?’ என்று எழுதிய கட்டுரைக்காக அரசு அவர்மீது ராஜத்துரோக வழக்கைத் தொடுத்தது. அதனால்