பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

விடுதலைப் போரில் தமிழ் பத்திரிகைகள்


தம்படிகள்! அதாவது அன்றைய நாணய மதிப்பில் காலணா விலையில் விற்பனையான பத்திரிகை.

இந்த ‘சங்கு’, படித்தவர்களைவிடப் பாமரர்கள் இடையே தான் அதிக செல்வாக்குப் பெற்று விற்பனையானது. ஏன் தெரியுமா? விலை காலனா என்பதால். முதல் பக்க முகப்பு கேலிச் சித்திரமும், பிற பக்கங்களில் ஆங்கிலேயர் ஆட்சியின் எதிர்ப்பையும் ஏற்று வெளிவந்த இதழாகும்.

அண்ணல் காந்தியடிகளின் அகிம்சை வழி நின்று, இந்தியாவை அடக்கு முறைக்கு ஆளாக்கிய ஏகாதிபத்திய தாக்குதலுக்குச் சவால் விட்டு எழுதி வெளிவந்த பத்திரிகை இது.

செயலுக்கு அஞ்சி, சொல்லில் தஞ்சம் புகுந்து, உரையாடல்களிலே ஊசலாடி, உணர்ச்சிகளைப் பறிகொடுத்து, பாமரரிடம் ஒதுங்கி, பதவிகளில் பதுங்கி, மிதவாதிகள் என்ற பெயரில் இதமான சுகவாழ்வு நடத்தி, அரசியலில் மிதந்து வந்தவர்கள்மீது பொது மக்களுக்கு ஆத்திரம் இருந்ததை ‘சுதந்திரச் சங்கு’ பத்திரிகை ‘சாஸ்திரிகள் பேச்சு’ என்று தலைப்பிட்டுக் கடுமையாகக் கண்டித்தது.

செத்தல் வாடுவின் காய்ந்த வத்தல், துரைச் சித்தம், க்ஷணப் பித்தம், குரங்காட்டி மந்திரி, ஷோக்குப் பிள்ளைப் போக்கு, மீசைக்குப் பூசை போடல், அவலும் உமியும் ஊதித்தின்போம் போன்ற சங்கு பத்திரிகைகளின் தலைப்புகள் அக்கால மக்கள் இடையே பிரசித்திப் பெற்றக் கவர்ச்சித் தலைப்புகளாக இருந்தன.

தேசிய உணர்வைத் துணிவுடன் பரப்பத் தொண்டாற்றிய பத்திரிகைகளில் ‘சங்கு’ பத்திரிகை ஒன்றாக விளங்கியது.

‘பாரத தேவி’ என்ற ஒரு தினசரி பத்திரிகையைச் சதானந்தம் என்பவர் 1938-ஆம் ஆண்டில் துவக்கிப் பல ஆண்டுகள் நடத்தினார். தேசிய உணர்வுகளுக்காக அது பரபரப்புடன் உழைத்தது.