பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

சமுதாய விடுதலைப் போரில் திராவிடர் இயக்க இதழ்கள்


ஆரியம் திராவிடம் கலக்கட்டுமே;
ஆனந்த தாண்டவம் பிறக்கட்டுமே!

என்பதுதான் அந்தப் பாடல். அப்படியானால், ஆரியம் என்ற இனமும், திராவிடம் என்ற இனமும் இன்று வரை வாழ்கிறது என்பதுதானே சமுதாயச் சிந்தனை? அந்தச் சிந்தனைப்போகம் ஒன்றாக வேண்டும் என்றுதானே இரு இனக் காதல் களமும் விரும்புகிறது. இந்த இனவேறுபாடு 2005-ஆம் ஆண்டில் திரைப்படத்தில் போகம் காண மோகம் கொள்கின்றபோது, திராவிட-ஆரிய இன மோதலை இந்திய அரசே உருவாக்கலாமா? இதுவா மதச் சார்பற்ற நாடு?

பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் 31.1.76 அன்றிரவு தி.மு.கழக ஆட்சியைக் கலைத்தார். பிறகு நெருக்கடி நிலை (Emergency)யைப் பிறப்பித்தார். அதனால் பத்திரிகை நிலைகள் பெரிதும் பாதித்தன. காவல் துறைத் தணிக்கை அதிகாரிகளது பார்வைக்குப் பிறகே சில பத்திரிகைகள் அச்சாகும் சூழ்நிலை. அந்தச் சூழ்நிலை பத்திரிகைச் சுதந்தரத்தின் கழுத்தை ஈரத்துணிப் போட்டு அறுத்துக் கொண்டிருந்தது.

அதன் எதிரொலி என்ன தெரியுமா? திராவிடர்களுக்கு, குறிப்பாகத் தமிழர்களுக்கு மானம் ஊட்டிய தந்தை பெரியார் பத்திரிகை ‘விடுதலை’ என்ற நாளேடு, எந்தக் காலத்திலும், எந்த நேரத்திலும் பெரியார் அவர்களைத் தந்தை பெரியார் என்று எழுதுவது அந்த ஏடு வழக்கம். அந்த இதழ் அவருடைய பத்திரிகை ஏடு. அது மட்டுமன்று, சுயமரியாதை இயக்கமும், அதன் வழிவழி வந்த கழகங்களும் பெரியார் அவர்களைத் தந்தை பெரியார் என்றே குறிப்பிடுவது வழக்கமாக இன்றும் இருக்கின்றது.

இந்தக் கழகப் பழக்க வழக்கத்திற்கு ஏற்றவாறு, இந்திரா காந்தியின் நெருக்கடி காலக் கெடுபிடிகள் நேரத்தில் விடுதலை. நாளிதழில் தந்தை பெரியார் என்று எழுதப்பட்டிருப்பதைப் பார்த்த ஆரியத் தணிக்கை அதிகாரிகள், ‘தந்தை பெரியார் என்று எழுதக் கூடாது என்றும், அதே நேரத்தில் சங்கராச்சாரி எனும் பெயருடன் ‘ஆர்’ என்னும் மதிப்பு விகுதியைச் சேர்த்தே அச்சாக வேண்டும் என்றும் அச்சுறுத்தினார்கள். என்ன பெயர் இதற்கு? பெரியார் திராவிட இனத்தின் பெருந் தலைவர்?