பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

149


நிகழ்ச்சி முதல் அவர் சுயமரியாதை உணர்ச்சியில் தீவிரவாதியானார்.

திருநெல்வேலி நகரில் தீண்டாமை விலக்கு மாநாடு நடந்தது. அதற்கு நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமை உரை ஆற்றும்போது, ஜீவா அந்தப் பேச்சை இடைமறித்து, குறுக்குக் கேள்விகள் பல கேட்டு - அவரைத் தாக்கிப் பேசி, வாட்டி வதைத்துக் கொண்டிருந்தபோது, தந்தை பெரியார் அவர்களே அதைக் கண்டு, நடந்தவற்றுக்குப் பாரதியாரிடம் மன்னிப்புக் கேட்ட சம்பவம், ஜீவாவின் முனைப்பான வினைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக் காட்டாகும்.

காந்தியடிகள் 1927-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பயணம் செய்தபோது, ஜீவாவும் அவருடன் சென்றார். அப்போது அதே சிறுவயல் கிராம காந்தி ஆஸ்ரமத்தில் கீதைக்கு விளக்கம் கேட்டு முடிந்தவுடன், ‘உங்களுக்கு என்ன சொத்து இருக்கிறது? என்று அடிகள் கேட்டபோது, ‘இந்தியாதான் என் சொத்து’ என்றார் ஜீவா. உடனே மகாத்மா அவர்கள், இல்லை; இல்லை! நீங்கள் இந்தியாவின் சொத்து’ என்றார் என்று அ.மா. சாமி தனது ‘தமிழ் இதழ்கள் தோற்றம் வளர்ச்சி’ நூலில் கூறுகிறார்.

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் தம்பி திரவியம் என்பவருக்கு, சென்னை தியாகராய நகரிலுள்ள வெங்கட்ராமன் தெருவில் 1952-ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது. திருமண நிகழ்ச்சியின் தலைவர் ஜீவா. வரவேற்பாளர் கவிஞர் கண்ணதாசன். வாழ்த்து கூறும் உரையாளர்கள் திருக்குறள் வீ. முனுசாமி, எம்.பி., அ. பொன்னம்பலனார் ஆகியோர்.

வரவேற்பாளர் கண்ணதாசன் தி.மு.க.வில் அப்போது தான் உறுப்பினரான புதியவர். அவர் வரவேற்புரை ஆற்றும் போது, உண்மையான சீர்திருத்தம் செய்வதையே தி.மு.கழகம் முதற் பணியாகக் கொண்டது என்றும், கம்யூனிஸ்டுகளும் காங்கிரசும் அத்தகையவரல்லர் என்றும் கூறி, அதற்கு ஓர் எடுத்துக்காட்டை விளக்கினார்.

மது விலக்குக் கொள்கையிலே காங்கிரஸ் சரியான சீர்திருத்தப் போக்கைக் கடைப்பிடிக்காததால்தான், ஜெமினி