பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

பத்திரிகை ஓர் அறிமுகம்


முடிதிருத்துவோர், சலவையாளர், கொல்லன், கொத்தன் ஆகியோரின் வருவாய் அவலங்கள் ஆகிய பிற சம்பவங்களை எல்லாம் பத்திரிகைகள் அன்றாடம் சுமந்து வந்து மக்கள் இடையே காட்சிப் பொருள்களாக்குவதே அவற்றின் கடமைகளாக இருக்கின்றன.

எனவே, பத்திரிகைகள், செய்தித் தாள்கள், நாளேடுகள் தினந்தோறும் அவற்றை மக்களிடையே கொண்டு வந்து குவிக்கும் வாழ்க்கைக் கலையின் சுரங்கங்களாகப் பணியாற்றுகின்றன எனலாம்.

அதனால், பத்திரிகைகளை வெறும் கற்பனைத் தாள்கள் என்று மட்டும் கூற முடியாது. ஏதோ வாய்மொழிகளாக வந்து குவிந்த ஏடுகளல்ல. பத்திரிகைகள் உண்மைச் செய்திகளை, அந்தந்த ஊர் மக்கள் செயல்களிலே முளைவிட்டு வெளியேறி தலைக்காட்டும் எண்ணங்கள் வழியாகக் கண்ட கேட்ட உணர்ச்சிகளை, நிகழ்ச்சிகளை மக்கள் அறிய வேண்டும் என்ற ஆர்வப் பெருக்கோடு, ஊரறிய, உலகறிய எடுத்துக் கூறும் ஒரு விஞ்ஞானச் செய்திக் கருவிதான் பத்திரிகை!

மக்கள்கவி பாரதியார் பாடியது போல; ‘கலைமகளின் கொள்ளிடம் மட்டுமன்று பத்திரிகை; மக்கள் சக்திதான் அதன் பிறப்பிடமும் என்ற எண்ண வடிவுக்கேற்றவாறு, பத்திரிகை மக்களுக்காக, மக்களைச் சுற்றி வட்டமிடும் கழுகுப் பார்வையோடு பறக்கும் பண்புமுடையதாகும்’ என்றார். அந்த கழுகு நோக்கு பத்திரிகைகளுக்கு இன்றும் அமைந்துள்ளது.

பத்திரிகையாளர்களது இந்த நோக்குகள், அறிவியல் தொடர்பானதாகவும், கலையியல் சார்பானதாகவும் அமைந்திருக்க வேண்டும். ஏனென்றால், கண்களால் காண முடியாத காரியங்களை அறிவியல் நம்பாது. காண இயலாதவற்றைப் பற்றிய ஆய்வையும், தேடுதலையும் செய்வதுதான் விஞ்ஞானத்தின் வித்தகம்.

ஒரு துளி இரத்தத்தைச் சோதிக்கின்ற அறிவியல் ஆய்வாளன்; அதிலுள்ள நீர் எவ்வளவு? உப்பு எவ்வளவு? அழுக்கு எவ்வளவு? என்ற கணக்கிலே ஈடுபடுவான்.

அந்த இரத்தம் கெட்டுப் போனது ஏன்? என்ற வினாவை எழுப்பி அதற்கு விடை காண்பான் உடற்கூறு மேதை.