பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



17


செய்தியாளரும் ஒரு -
தசாவதானக் கலைஞரே!


வேளாண்மை செய்யும் விவசாயி ஒருவனுக்கு எப்படி வயலும் வாய்க்காலும் மாடும் கிணறும் அவசியம் தேவையோ, அதுபோல, பத்திரிகையாளருக்கும் செய்தி சேகரிப்பாளர்கள் அவசியம் தேவை!

பத்திரிகை துவங்கிய காலத்தில், அவரவர் செய்திகளை அஞ்சல்களிலும், அவசரச் செய்திகளானால் தந்தி, டெலிபோன், ட்ரங்கால்களிலும், இறுதியாக ஆட்கள் மூலமாகவும், அந்தந்தப் பத்திரிகைகட்குரிய உள்ளுர் விற்பனை முகவர்களாக இருக்கும் ஏஜெண்டுகள் மூலமும் பத்திரிகை அலுவலகத்திற்குச் செய்திகள் வந்து சேரும்.

கடிதம் மூலமாக பெரும்பாலும் பத்திரிகைக்கு வருவது தான் சர்வ சாதாரணச் செயலாக இருக்கிறது. கடிதத்திற்கு வடமொழியில் ‘நிருபம்’ என்று பெயர். அவர்கள் அன்றாடம் நிகழும் செய்திகளை ‘நிருபம்’ மூலமாக எழுதியனுப்புவதால், அவர்களுக்கு நிருபர் என்று பெயர் வந்தது. இங்லீஷ் மொழியில் அவர்களை Reporters என்று கூறுவார்கள். தமிழில் நாம் அந்தச் சொல்லைச் செய்தியாளர் என்கிறோம்.

கட்டுரையாளர்கள், கதை, கவிதை எழுதுவோர்களது பெயர்களைத்தான் முன்பெல்லாம் பத்திரிகைகள் வெளியிட்டன. அதனால், அந்தப் பெயர்கள் அத்தகைய எழுத்தாளர்களுக்கு மக்கள் இடையே செல்வாக்கும், சொல்வாக்கும் ஈட்டித் தந்தன.