பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

285



செய்தியாளர்களால் நாட்டுக்கு என்ன பயன் என்றால், அவர்கள் சமுதாய விழிப்புக்கு நாள்தோறும் பணியாற்றி, ஆங்காங்கே நடைபெறும் உண்மைகளை உலகுக்கு உணர்த்தும் பொறுப்பினைச் செய்வதால் அவர்களைச் சமுதாய விழிப்புணர்வூட்டும் ஆசான்கள் என்றும் கூறலாம்.

சமுதாயத்தில் அன்றாடம் நடைபெறும் அநீதிகளை மக்களுக்குச் சுட்டிக் காட்டுவதோடு இராமல், மக்களுக்கு தீமைகள் வருமுன் காக்கும் சீர்திருத்தவாதிகளாகவும் - செய்தியாளர்கள் இருக்கின்றார்கள். அதனால், அவர்களை மக்கள் இயக்க இயங்கும் சீர்திருத்தவாதிகள் என்றும் பெருமையோடு குறிப்பிடலாம் இல்லையா?

செய்தியாளர்கள் நியமிக்கப்படாத பத்திரிகையாக இருந்தால், அந்த இடங்களுக்குப் பத்திரிகை விற்பனையாளரே (Agent) Reporterராக பணியாற்றுவதுமுண்டு. அந்தவிதமான செய்தியாளர்கள் அந்த ஊரிலே உள்ள மக்களால் பெரிதும் மதிப்போடும், மரியாதையோடும் நடத்தப்படுபவர்களாக நடமாடுவார்கள்.

எனவே, செய்தியாளர்கள் மக்கள் நம்பிக்கைக்காக உழைக்கும் உண்மைப் பணியாளர்களாக உலா வரவேண்டும். இல்லையானால், ஊராரே அவர்களை அவமதிக்கும் நிலைகளையும் பெறுபவர்களாக இருக்க நேரிடும். இதை உணர்பவர்களால்தான் செய்தியாளர்களுக்கு மரியாதையும், மதிப்பும் உருவாகும் என்பதை - நிருபர்கள் உணர்ந்து செய்திகளைத் திரட்ட வேண்டும்.

ஒவ்வொரு நகரம், வட்டம், மாவட்டம், கிராமங்களில் பணியாற்றும் செய்தியாளர்களால், அந்தந்த பத்திரிகைகளுக்கு நல்ல புகழும், மரியாதையும், மதிப்பும் உருவாக வேண்டுமானால், அந்தச் செய்தியாளர்கள் நாணயவாதிகளாய் ‘நா’நய வாதிகளாய், ஒழுக்கம் ஓம்பிகளாய், கையூட்டு ஆசை அற்றவர்களாய், நேர்மையான பண்புடையவர்களாய், பழக்க வழக்க அன்பர்களாய், கல்வியறிவுச் சிறப்புடையவர்களாய், செய்திகளைச் சேகரிக்கும் திறனாளர்களாய், மக்களுக்கேற்ற நண்பர்களாய், தன்னம்பிக்கை உடையவர்களாய், முன்கோப மற்றவர்களாய், நடுநிலையாளர் நோக்குடையவர்களாய்,