பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

இந்தியாவில் - இதழியல் கலை! தோற்றம்! வளர்ச்சி! தொண்டு!


கொண்டு சென்றபோது, அந்த நீதிபதி தலைமை ஆளுநருக்கு ஹிக்கி கட்ட வேண்டிய இழப்பீட்டுத் தொகையை ரத்து செய்தார்.

கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியும், அதிகாரிகளும் ஒரு பத்திரிகையாளர் மீது இத்தகைய ஓர் அடக்க முறையை ஏவி விட்டதைக் கண்டு ஹிக்கி அஞ்சவில்லை. ஓர் ஆசிரியன், பத்திரிகையாளன்; ஆட்சியின் கெடுபிடிக் கொடுமைகளை எப்படி எதிர்த்து ஏறுநடை போட வேண்டும் என்பதற்கான ஓர் எடுத்துக்காட்டாக அன்றே அவர் நின்று காட்டிய மாவீரராகத் திகழ்ந்தார்.

ஆனால் ஹிக்கி, பத்திரிகை ஆசிரியனுக்கும் பத்திரிகை நடத்துவோனுக்கும் பத்திரிகை சுதந்தரம் தேவை என்பதை உணர்ந்து அதையும் கட்டுரை வடிவில் தனது எண்ணமாக வெளியிட்டார்.

‘பத்திரிகை ஆசிரியனால், பத்திரிகையாளனால் ஓர் ஆட்சியில் எதையும் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும்’ என்ற பேனா முனை வீரர் வால்டேரின் கருத்துக்களுக்குச் சான்றாக, இந்திய விடுதலையின் தந்தையாக இயங்கிய அண்ணல் காந்தி அடிகள், தென் ஆப்பிரிக்காவில் ‘இண்டியன் ஒப்பீனியன்’ indian opinion என்ற பத்திரிகைக்கு அவர் ஆசிரயராக பணியாற்றியபோதே, பத்திரிகைகளுக்குரிய நான்கு ஒழுக்கங்களை, கடமைகளை வெளியிட்டார். அவை இவை :

1. பத்திரிகைகள் உண்மையாகப் பணி புரியவேண்டும்.

2. உண்மையான கருத்துக்களை மட்டுமே உலகுக்கு உரைப்பது; உணர்த்துவது.

3. நேர்மையாக ஆட்சியின் குறைகளை எடுத்துக் கூறுவது.

4. எதை எழுதினாலும் - எழுத்துக்களைத் தன்னடக்கத்துடனேயே ஆட்சி செய்வது

இந்தக் கருத்துக்கள் நான்கும் பல ஆண்டுகளுக்கு முன்பு காந்தி அண்ணலால் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், இவை இப்போதும் இளம் தலைமுறைப் பத்திரிகையாளர்களுக்கும் பொருந்துகிறது அல்லவா?