பக்கம்:இதுதான் திராவிடநாடு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதுதான் திராவிடநாடு

11

கத்தின் முத்துக்களுக்கு, பொன் அணி மணிகளுக்கு, மெல்லிய ஆடைகளுக்கு, மணச்சுவைப் பொருள்களுக்கு ஏங்கித் தவம் கிடந்தனர். அவற்றைப் பெறத் தம் பேரரசின் பெருந்திறைச் செல்வம் முழுதும், தம் தம்பட்ட சாலையில் அடித்த பொன்னாணயங்களத்தனையையும் புதிதுபுதிதாகக் கொட்டி யளந்தனர். அவர்களுக்குமுன் ஆயிர ஆண்டுகளாகக் கலையாட்சி செய்த யவனர் அல்லது கிரேக்கர் தமிழகத்திலிருந்து அரிசியும் சர்க்கரையும், அகிலும் சந்தனமும், தேக்கும் யானைத் தந்தமும் பெற்று, இப்பொருள்களுக்குரிய தமிழ்ப் பெயர்களையே அவற்றுக்குரிய பெயர்களாகத் தம் மொழியிலும் மேலை மொழிகளிலும் வழங்கச் செய்துள்ளனர்!

பெண்களே வீரராகவும் ஆட்சியாளர்களாகவும் விளங்கிய கன்னி நாடு 'தமிரிகா' என்று, அவர்கள் தமிழகத்தைப் போற்றினர். அக்கால நாகரிக உலகின் மையமாய், வாணிகக் களமாய், கீழையுலகின் கலங்களும் மேலையுலகின் கலங்களும் வந்துகூடும் உலகக் கடல் தளமாய் விளங்கிய மரக்காணம், மல்லை, பொதுசா அல்லது புதுச்சேரி என்னும் பாண்டிச்சேரி, காவிரிப்பூம்பட்டினம், சோழன் தொண்டி, கொற்கை, மேல்கரை முசிறி (தற்காலத் தென்கன்னட மாவட்டத்திலுள்ள மங்களூர்) முதலிய துறைமுகங்களைப் பற்றியும், அவற்றின் வளங்களைப்பற்றியும் கிரேக்க வரலாற்று ஆசிரியரும் நிலநூல் ஆசிரியரும் பலபடப் புகழ்ந்து பாராட்டியுள்ளனர்.

யவன வீரரும் வடஆரிய எழில் நங்கையரும் புத்தாக்கம் தேடி இப்புகழ்நில வேந்தரான சேர சோழ பாண்டியரிடமும் குறுநில மன்னரிடமும் அரண் காவலராகவும், மனைகாவலராகவும், ஏவலராகவும் பணிநங்கையராகவும் இடம்பெற்று வாழ்ந்