பக்கம்:இதுதான் திராவிடநாடு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

இதுதான் திராவிடநாடு

தனர். யவன உரோமகப் பேரரசர் பாண்டியருடன் தூதுறவும் நேச உடம்படிக்கையும் கொண்டு தம் வலிமையைப் பெருக்கினர். உரோம கிரேக்க நாகரிகங்கள் பிறப்பதற்கு ஆயிர மூவாயிர ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மேலையுலக நாகரிகத்தின் தலையூற்றாய் அமைந்த நாடு எகிப்து. அந்நாட்டவர்கள் தம் நாகரிகத்தின் மூலஉயிர் முதல் நிலம் 'பண்ட்' என்று போற்றினர். இது பாண்டிநாடே என்பர் திராவிட ஒப்பியல் மொழி நூலின் தந்தையாகிய நல்லாயர் கால்டுவெல். அப்'பண்ட்' நிலம் பொன் விளையும் நாடு என்றும், அதில் அந்நாளைய பெருந்துறைமுகம் 'ஓபிர்' என்றும் அவர்கள் தம் ஏடுகளில் குறித்தனர். இத்துறைமுகம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 'உவரி'யே என்றும் நல்லாயர் கால்டுவெல் கருத்துரைத்தார்.

மூவாயிர, நாலாயிர ஆண்டுகளுக்கு முற்பட்ட அந்நாட்களிலிருந்தே, இன்றைய கோலாறும் குடகு நாடும், காவிரி அல்லது பொன்னிக்கரையும், வைகைக் கரையும் பொன் விளையும் நிலங்களாய் இருந்தன என்பதைச் சங்க இலக்கியங்களும் சிந்துவெளி நாகரிகச் சின்னங்களும் குறித்துக் காட்டுகின்றன. திப்பு சுல்தான் காலம்வரை இப்பொன் வளத்துக்காகவே குடகு நாட்டையும் அது சூழ்ந்த கொங்கு நாடு எனும் மேட்டு நிலத்தையும் கைக்கொள்ளப் பல தென்னாட்டு அரசர்கள் கடும் போரிட்டுள்ளார்கள். அசோகன்கூட இப்பொன்னுக்கு ஆசைப்பட்டே தெற்கே படையெடுப்புகள் பல நடத்தித் தோல்வியுற்று, அத்தோல்விகளின் அவமதிப்பை மறைக்கவே புத்தமதஞ் சார்ந்து துறவு பூண்டானென்று வரலாறு கூறுகின்றது.

எகிப்தியருடன் பழமையிலும் பெருமையிலும் போட்டியிட்டுக் கடலாட்சியிலும் நாகரிகத்திலும்