பக்கம்:இதுதான் திராவிடநாடு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதுதான் திராவிடநாடு

13

அவர்களை நெடுந்தொலை விஞ்சி நின்றவர் பினீசியரும், யூதரும், சால்டியரும், சுமேரியரும், ஏலமியரும், சிந்து வெளி மக்களும் ஆவர். அவர்களனைவருடனும் நாலாயிர, ஐயாயிர ஆண்டுகளுக்கு முன்னிருந்தே வாணிகத் தொடர்பும், குடியேற்றத் தொடர்பும் கொண்டிருந்தனர் தமிழர்! சுமேரிய, சிந்துவெளி நகரங்களில் தமிழரும், தமிழ் வணிகரும் கடலோடிகளும், உலவினர். அந்நாடுகளின் நாணயங்கள் தமிழகத்திலும், தமிழகத் தங்கம் அந்நாடுகளிலும் காணப்படுகின்றன. தேக்கு, சந்தனம், யானைத் தந்தம், மணப் பொருள்கள், குரங்குகள் முதலியவற்றைத் தமிழகம் அந்நாடுகளுக்கு அனுப்பியதாக அறிகிறோம். அது மட்டுமன்று; புதுக்கற்கால நாகரிகத்திலேயே அவ்வெல்லா நாகரிகங்களும் நிலவிய அத்தொல்பழங் காலத்திலே, தமிழகமட்டும் தங்கச்சுரங்கமட்டு மன்றி, இரும்புச் சுரங்கங்களும் அகழ்ந்து, இரும்புக் கருவிகளும் வழங்கத் தொடங்கியிருந்ததாக அறிகிறோம்.

அறவுருவான காந்தியார் போற்றிய கீழ்திசையின் பழஞ்செல்வங்களான கைத்தறியும் இராட்டினமும் நெசவுத் தொழிலும் உழவும் பழங்காலத்திலேயே- இருபதினாயிரம் நாற்பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே-தமிழகத்தில் வழங்கின என்பதை மைசூர் இராயலசீமா பகுதிகளில் கல்நிலங்களில் அகழ்ந்து காணப்படும் கல்லறை மாடங்கள் காட்டுகின்றன.


3. கீழை உலகத் தொடர்புகள்

இம்மேல்திசைத் தொடர்புகளுக்குப் பழமையிலோ பெருமையிலோ பிற்பட்டனவல்ல கீழ்திசைத் தொடர்புகள். தமிழ் மொழியே இவற்றையும் குறித்துக்காட்டுகிறது.