பக்கம்:இதுதான் திராவிடநாடு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதுதான் திராவிடநாடு

21

கடந்து கங்கையும் கடாரமும் அடிப்படுத்தியதுண்டு. கனிஷ்கன் கங்கை கடந்ததில்லை, செரன் செங்குட்டுவன் கங்கை கடந்து கனகவிசயரை - பேரரசன் கனிஷ்கனையும் அவன் கூட்டாளியையுமே- கல்சுமக்க வைத்தான். ஹர்ஷன் விந்தம் கடந்ததில்லை, ஆனால் விந்தம் கடக்குமுன் தென்னகம் ஆண்ட புலிகேசி ஹர்ஷனையும், தமிழகமாண்ட பல்லவன் நரசிம்மவர்மன் அந்தப் புலிகேசியையும் வென்று மண் கொண்டனர் !

அலாவுதீன் கில்ஜி, முகமது பின் துக்ளக் விந்தம் கடந்த அன்றே தம் பேரரச வாழ்வு இழந்தனர். அவர்கள் வடதிசையை எவ்வளவு எளிதில் கீழடக்க முடிந்ததோ, அவ்வளவு எளிதில் விந்த எல்லையையே கடக்க முடியவில்லை. அவுரங்கசீப் காலம்வரை நாலு முகலாயப்பேரரசர் முயற்சிகளின் முடிவு-முகலாயப் பேரரசின் வீழ்ச்சியாகவே முடிந்தது!

தென்திசை வடதிசையை வெல்ல முடிந்தது. வடதிசை தென்திசையை என்றும் அணுக முடிந்ததில்லை. அதுமட்டுமன்று. வட திசையின் வரலாறு ஓயாத அயலினம், அயலரசர் படையெடுப்பாகவே உள்ளது. தென் திசையில் அந்த அயலினத்தவர் நிழலும் படவில்லை. அறவோர் உருவில், புலவோர் உருவில், விருந்தினர் உருவில், இரவலர் உருவில், வணிகர் உருவில் வந்தாலன்றி, தென்திசை அணுகியவர் எவரும் இலர் !

ஆரியர், பாரசீகர், கிரேக்கர், குஷாணர், பார்த்தியர், ஊணர், அராபியர், ஆப்கானியர், முகலாயர் முதலிய பல அயலார் படையெடுப்புக்களின் வரலாறே வட இந்தியாவின் வரலாறு. திராவிடர் பழம் பண்பாட்டின் சிதைவுடன் அவ்அயலார்களின் அயற்பண்பாடு கலந்த கலவைப் பண்பாடே வட இந்தியப்