பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

கும்பகோணத்தில் உள்ள குடந்தைக் கீழ்க் கோட்டம் என்னும் நாகேஸ்வர சுவாமி கோயில் ராஜராஜன் காலத்துக்கு முந்தியக் கலைக் கோயில், அங்குள்ள அர்த்தநாரி, பிக்ஷாடனர் எல்லாம் கலைப் பிரசித்தி உடையவர்கள். அங்குள்ள நடராஜரது செப்புப் படிமம் அழகு வாய்ந்தது. கோனேரி ராஜபுரத்து நடராஜரும், திரிபுராந்தகனும் ராஜராஜன் அமைத்த செப்புப் படிமங்கள் என்று தெரிகிறது. அவைகளைக் ‘காணாத கண் என்ன கண்ணே’ என்றுதான் கூறவேண்டும். தாராசுரத்துக் கோயிலில் உள்ள அன்னபூரணி முதலியோர் எல்லாம் கலை உலகில் அமரத்வம் வாய்ந்தவர்கள். அங்குள்ள சிவனது விசுவரூப தரிசனம் எங்கும் காணமுடியாத அற்புதச் சிற்பம். அங்கிருந்த சிலைகள் எல்லாம் தன் நடைபெயர்ந்து இன்று தஞ்சைக் கலைக் கூடத்தை அழகு செய்து நிற்கின்றன. திரிபுனத்திற்கும் நடையை எட்டிப் போட்டால் சரபரையும் அவர் சந்நிதியில் உள்ள ஜல பாஞ்சிகைகள் இருவரையும் தரிசிக்கலாம். அவைகளை ஆக்கிய சிற்பிகளுக்கு வணக்கமும் செலுத்தலாம்.

கலையை மறந்து, பக்தி சிரத்தையோடு கோயில்களை அணுகுபவர்கள் என்றால் நேரே சீர்காழி சென்று சம்பந்தருக்கு அருள் செய்த தோணியப்பரையும் புள்ளிருக்கும் வேளூர் என்று புராணப் பிரசித்தி பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் சென்று வைத்திய நாதனையும் வணங்கலாம், அவகாசம் இருந்தால் திருப்புன்கூர் சிவலோகநாதன், வெண்காடு மேவிய விகிர்தன், திருக்கடையூர் கால சம்ஹாரர் முதலியவர்களையும் கண்டு வணங்கலாம். வழியில் உள்ள திருத்தலங்களில், வேள்விக் குடியில் கல்யாண சுந்தரர், சாய்க்காட்டில் வில்லேந்திய வேலன், வழுவூரில் கஜ ஸம்ஹாரர், பிக்ஷாடனர் முதலிய அரிய வடிவங்களுக்கும்

191