பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

அமைத்தான் என்பதும் வரலாறு. விஜயாலயன் மகனான முதலாம் ஆதித்தன்தான் திருப்புறம் பயத்திலுள்ள ஆதித்தேச்சுரம் என்ற கோயிலையும் பண்டார வாடையை அடுத்த திருச்சேலூரில் தேவராயன் பேட்டைக் கோயிலையும் அமைத்தான் என்பர். இவர்களை எல்லாம்விட, கோயில் கட்டுவதிலும் கோயில்களைப் புதுப்பிப்பதிலும், நிபந்தங்கள் ஏற்படுத்துவதிலும் மிக்க சிரத்தை காட்டியவர்கள் கண்டராதித்தனும் அவனது மனைவி செம்பியன் மாதேவியமே. திருவாரூர் அறநெறி, கோனேரிராஜபுரம் என்னும் திருநல்லம், திருமணஞ்சேரி, தென் குரங்காடுதுறை முதலிய கோயில்களேயன்றி இன்னும் பலப்பல கோயில்களைக் கட்டியும் புதுக்கியும் வைத்திருக்கின்றனர். செம்பியன் மாதேவியின் புகழ் என்றும் சரித்திர ஏடுகளில் நிலைத்திருக்கும். அவரே ராஜராஜனை சிவபாத சேகரன் ஆக்கியவர். அவன் கட்டிய கோயிலைத்தான் அறிவோமே.

ராஜராஜனுக்குப் பின் அவன் மகன் ராஜேந்திரனும் அவன் வழி வந்த இரண்டாம் ராஜராஜன், ராஜாதி ராஜன், குலோத்துங்கன் எல்லோரும் கட்டிய கோயில்கள் இன்றும் வானளாவ அவர்கள் புகழைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன. தாராசுரம் ஐராதேஸ்வரர் கோயிலும், திரிபுவனம் கம்பஹரேஸ்வரர் கோயிலும் அவைகளுள் சிறப்பானவை. இப்படியே கோயில்களின் ஜாபிதாவைக் கொடுத்து உங்களைத் திணற அடிக்க விரும்பவில்லை. காண வேண்டிய ஒரு சில கோயில்களை மட்டும் சுட்டிக்காட்டி விட விரைகிறேன்.

190