பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

கடவுளை உருவிலியாகவே கூறியிருந்தாலும், அந்த உருவம் இல்லாத இறைவனை எண்ணற்ற உருவங்களில் செதுக்கியும், வடித்தும் நிறுத்தி இருக்கிறார்கள் கலைஞர்கள். பத்ரிநாதனும், கேதாரநாதனும், விஸ்வநாதனும், ஜகந்நாதனும், ரங்கநாதனும், ராமநாதனும் பாரத நாட்டின் எல்லைக் காவலர்களாக அமைந்து இச் சிற்பக் கலை நாளும் வளர வகை செய்திருக்கிறார்கள். அபூ மலையில் உள்ள சமணக் கோயில்கள் இரண்டும், குஜராத்தில் பல பகுதிகளில் காணும் சமணர் கோயில்களும் மற்றைய கோயில்களுக்கு சளைத்தவை இல்லைதான். மத்தியப் பிரதேசத்திலுள்ள கஜுராஹோ கோயில்கள் கோனார சூரியனார் கோயில் முதலியவைகளில் ஆண் பெண் உறவை விளக்கும் சிற்பங்கள்தாம் எத்தனை எத்தனை! பெண்களின் வனப்பை எல்லாம் எடுத்துக் காட்டும் சிற்பங்களே எண்ணற்றவை. புவனேஸ்வரத்தில் சிற்ப அழகைவிட கோயில் நிர்மாண அழகு சிறப்பான அம்சமாக இருப்பதைக் காண்கிறோம். வேங்கடம் முதல் குமரி வரை பரந்து கிடக்கும் தமிழகத்திலோ கேட்கவே வேண்டாம். ஒவ்வொரு கோயிலும் ஒரு அற்புதக் கலைக் கூடம். பல்லவரும் சோழரும் நாயக்கரும் பாண்டியரும் போட்டி போட்டுக் கொண்டு கோயில்கள் கட்டியிருக்கிறார்கள். சிற்பக் கலையை வளர்த்திருக்கிறார்கள். மாமல்லபுரமும் காஞ்சியும் பல்லவர் காலத்தியவை என்றால், தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரம் முதலியவை சோழர் காலத்துக் கலை வளர்ச்சிக்கு சிறந்த எடுத்துக் காட்டு, மதுரை, ராமேஸ்வரம், சீரங்கம், கிருஷ்ணாபுரம். எல்லாம் நாயக மன்னர்களின் கலை ஆர்வத்துக்கு சான்று

17