பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

சென்ற வருஷம் நான் வடநாட்டுத் தலங்களைக் காணச் சென்றபோது எனக்கிருந்த அதிசயம் என்ன வென்றால் வடநாட்டில் உள்ள பல பிரபலமான கோயில்கள் எல்லாம் அதே பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பதினோறாம் நூற்றாண்டின் முற்பகுதியிலுமே எழுந்தவை என்பதுதான். இவைகளில் சிறப்பானவை ராஜஸ்தானத்தில் உள்ள அபூமலையில் உள்ள டில்வாரா சமணக் கோயில்கள். ஒரிசா என்னும் கலிங்கத்தில் உள்ள புவனேஸ்வரர் கோயில்கள், மத்திய பிரதேசத்திலுள்ள கஜுராஹோ கோயில்கள். இவைகள் எல்லாமே தமிழ்நாட்டில் ராஜராஜன் பெரிய கோயில் கட்டிய போது, சற்றேறக்குறைய அதே காலத்தில் கட்டப்பட்டவைதான். ஆம்! பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ்நாட்டில் மாத்திரம் அல்ல இந்திய நாடு முழுவதுமே ஒரு எழுச்சி இருந்திருக்கிறது. அந்த எழுச்சியின் காரணமாகவே கலை வளர்ந்திருக்கிறது. காவியம் விரிந்திருக்கிறது. ஏன், நாட்டின் பெருமையே வானளாவ உயர்ந்திருக்கிறது, தமிழ்நாட்டுப் பெரிய கோயிலைச் சிலர் பார்த்திருப்பீர்கள். இல்லாவிட்டால் அதைப் பற்றிப் பல தடவையாவது கேட்டிருப்பீர்கள். ஆதலால் இன்று கஜுராஹோ கோயில்களுக்கும் புவனேஸ்வரம் கோயில்களுக்கும் உங்களை அழைத்துச் செல்ல விரும்புகிறேன்.

இந்திய நாட்டின் கட்டிடக் கலையை விமர்சனம் செய்யும் இந்தியர் அதனை நாகரம், வேசரம், திராவிடம் என்று மூன்று வகைப்படுத்திக் கூறுவர். ஆனால், ஆங்கில விமர்சகர்களோ, இவற்றை ட்ரெவிடியன், இன்டோ ஆரியன் (Dravidian, - Indo Aryan) என்ற

38