பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

இரண்டே வகையில் அடக்கி விடுவர். இந்த முறைப்படி கஜுராஹோ புவனேஸ்வரம் கோயில்கள் எல்லாம் இண்டோ ஆரியன் கட்டிடக் கலை வகையைச் சேர்ந்தவையே. தென்னிந்தியத் திராவிடக் கட்டிடக் கலைக்கு மாறுபட்டவை என்றாலும், இரண்டு விதமான கட்டிடக் கலைகளுக்கும் ஒருமைப்பாடுகள் இல்லாமல் இல்லை. நம் நாட்டுக் கோயில் வாயில்களில் காணும் கோபுரங்களை அங்கே காண முடியாவிட்டாலும் கருவறைமேல் நாம் கட்டியிருக்கும் விமானங்களைப் போல் பெரிய பெரிய சிகரங்களை அமைத்திருக்கிறார்கள். கருவறையை அடுத்த அர்த்த மண்டபமே அங்கு அந்தரங்கமாகிறது. அதையே ஜகன் மோகன மண்டபம் என்றும் அழைத்திருக்கின்றனர். அதனை முந்திக் கொண்டிருக்கும் மகா மண்டபமே அங்கு சபா மண்டபமாக அமைகிறது. இன்னும் நம் கோயில்களில் உள்ள நூற்றுக்கால் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் முதலியன அங்கு காணப் பெறாவிட்டாலும் அங்கு நர்த்தன மந்திர், போகமந்திர் என்னும் மண்டபங்கள் இருக்கின்றன. இந்த அடிப்படை ஒற்றுமை வேற்றுமைகளை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு நாம் கஜுராஹோ புவனேஸ்வரம் கோயில்களைச் சுற்றிப் பார்க்கலாம்.

அன்று விந்தியப் பிரதேசம் என்று அமைக்கப்பட்டு இன்று மத்திய பிரதேசத்துள் இணைந்திருக்கும் பண்டல் கண்டு பகுதியிலேதான் கஜுராஹோ என்ற தலம் இருக்கிறது. இரயிலில் செல்வதானால் ஹர்பால்பூர் என்ற இடம் வரை ரயிலில் சென்று, அங்கிருந்து 60 மைல் பஸ்ஸில் பிரயாணம் செய்ய வேண்டும். கார் வசதி உடையவர்கள் ஆக்ரா, குவாலியர்,

39