பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

நான்கு பெண்களும் சேர்ந்து பாடினார்கள். அதன் பின் பஞ்சாபி 'கொஞ்சம் முன் வந்து ஆடிக் கொண்டே,

வீரத்திலே சிந்து தீரத்திலே - போரில்
வீறிட்டு எழுந்திடும் நாட்டினர் யாம்
பாரத்திலே புகழ் ஏறிச் சிறந்திடும்
பாஞ்சால நாட்டினுக் கீடுமுண்டோ ?

என்று கேட்டாள். அவள் பின் வாங்கு முன், இடது புறம் நின்ற வங்காளி துள்ளி வந்து,

பொங்கு திரைகளும் தொங்கு நுரைகளும்
பூக்களினங்களும் தாங்கி வரும்
கங்கை மகள் நடம் ஆடிவரும் எங்கள்
வங்கத்துத் தாய்க்கொரு ஈடு முண்டோ ?

என்று எதிர்க் கேள்வி போட்டாள் பாடிக் கொண்டே. “ஏதடா? இது என்ன பாரதி பாட்டிற்கே ஒரு புது மெருகா?” என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்குள் மராத்திப் பெண்ணும்,

மேலை நிலத்தினர் மெச்சிப் புகழ்ந்திடும்
மேன்மை படைத்த துறைமுகமும்
மாலைப் பருதிக் குழம்பில் குளித்திடும்
மாமலை மராட்டம் என் நாடாம்

என்று அடக்கமாகவே அவள் பெருமையைச் சொல்ல முன் வந்தாள். தமிழ்ப் பெண்ணும் இத்தனைக்கும் சளைத்தவளாகக் காணப்படவில்லை. அவளும் ஒய்யாரமாகவே ஒரு நடை நடந்து,