பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

கன்னித் தமிழ் இன்பப் பாய்ச்சலொடு
வையை காவிரி எல்லாம் புரண்டு வரும்
எண்ணத் திதிக்கும் தமிழ்நாடே புகழ்
ஏறிச் சிறந்திடும் என் நாடாம்

என்று வெகு அழகாகத் தன் கட்சியை வலியுறுத்தினாள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நான் “ஏதடா? இந்திய நாடு முழுவதும் எப்பொழுதும் ஒன்றாகவே இருக்க வேண்டும், பகுதிப் பிரிவினைகள், பாகப் பிரிவினைகள் எல்லாம் கூடாது என்று பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் படித்துப் படித்துச் சொல்லுகிறபோது இப்படி இவர்கள் தங்கள் தங்கள் நாட்டுப் பெருமையைத் தம்பட்டம் அடித்துக் கொண்டால் - அதிலும் - பெண்களுக்குள் இப்படிச் சண்டை வர ஆரம்பித்துவிட்டால் - இது எங்கு போய் முடியுமோ” என்றெல்லாம் சிந்தித்தேன். என் சிந்தனையைக் கலைத்துக் கொண்டு மறுபடியும் நான்கு பெண்களும் சேர்ந்து பாட ஆரம்பித்து விட்டார்கள்.

இந்து முசல்மான் கிறிஸ்தவரும் இன்னும்
எண்ணற்ற சாதி இருந்தாலும்
சொந்த சகோதரர் போல நாற்பது கோடி
ஜனங்களும் கூடிடுவோம்.

என்று பாடிக் கொண்டே, நான்கு பெண்களும் கை கோத்து பாரத மாதாவை வலம் வந்து வணங்கினார்கள். இந்தக் கடைசிக் காட்சியைக் கண்டதும் அதற்கு ஒரு ‘சபாஷ்’ போடத் தோன்றிற்று எனக்கு. உண்மைதானே. நம் நாட்டிலோ சாதி மத பேதங்களுக்குக் குறைவில்லை. இருந்தாலும், எல்லோரும் இந்தியர்கள் தானே. இந்த ஒற்றுமை உணர்ச்சி மட்டும் எல்லா

81