பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கின்றன. 3,400 மைல் நீளமுள்ள யாங்ட்ஸ் ஆறுதான் முதன்மையானது. 500 மைல் நீளமுள்ள ஹவாங் ஹோ என்ற மஞ்சள் நதி, தான் கலக்கும் கடலையே மஞ்சள் நிறமாக்கும் அளவுக்கு வண்டல் நிறைந்தது. மூன்றாவது பெரிய நதி ஸி-கியாங். இவைகளின் கிளை நதிகளும், ஆயிரக்கணக்கான கால்வாய்களும் இருக்கின்றன. இத்தனை பாசன வசதிகளுக்கேற்ப, விளை நிலங்களும் 26 கோடி ஏக்கர்களுக்கு மேல் உள்ளன.

கி. மு. 2, 697-இல் மஞ்சள் சக்கரவர்த்தி என்று அழைக்கப்பெறும் ஹாவாங் தீ என்ற அரசர்க்கரசரே நாட்டை ஒருமைப்படுத்தி ஒர் ஏகாதிபத்தியமாக அமைத்தவர். நாட்டுக்கு மட்டுமன்றி, சீன நாகரிகத் திற்கும் அவரே தந்தையாக விளங்கினார். அவர் காலத்திலிருந்தே வரலாறும் தொடங்குகின்றது. பின்னால் வந்த சக்கரவர்த்திகளில் பலர் கொடுங்கோலர்களாயிருந்தனர்; சிலர் ஏகாதிபத்திய வெறியர்களாகவும் இருந்தனர். வல்லமை பெருகிய காலத்தில், ஆமை கால்களையும் தலையையும் வெளியே நீட்டுவதுபோல், அவர்கள் பிறநாடுகளின் மீது பாய்வார்கள்; வல்லமையும் வளமும் குறைந்தவுடன் தம் அங்கங்களே உள்ளே இழுத்துக்கொள்வார்கள். இதனால் ஒரு காலத்தில் கொரியா, ஃபர்மோஸா என்ற தெய்வான், அன்னம், சயாம், பர்மா, பூட்டான், நேப்பாளம் முதலியயாவும் சீனாவுக்கு அடங்கியோ, கப்பம் கட்டியோ இருந்துவந்தன. ஆசியாவில் பெரிய வல்லரசாக வளர்ந்து விளங்கிய ஜப்பான் கூட முன்னாளில் சிறிது காலம் சீனாவுக்குத் திறை செலுத்தி வந்தது.

உலகிலே எகிப்தியர், பாபிலோனியர், இந்தியர், சீனர் ஆகியோரே பண்டைய நாகரிகங்களில் முதன்மையானவர்களாகக் கருதப்படுகின்றனர். எகிப்திய, பாபிலோனிய நாகரிகங்கள் இப்போது மறைந்து

116