பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ஏராளமான பொருளையும் அடைந்தது. கொரியா நாட்டை விடுதலை செய்வதாகச் சொல்லி, அதையும் ஜப்பான் கைப்பற்றிக்கொண்டது. 1900 ஆம் ஆண்டில் நடந்த பாக்ஸர் சண்டையில் பல நாடுகள் கூட்டாகச் சேர்ந்து சீனாவைத் தாக்கின. பிரிட்டன், ரஷ்யா, ஜப்பான், ஜெர்மனி, ஃபிரான்ஸ், அமெரிக்கா, ஆஸ்திரியா, இத்தாலி ஆகிய நாடுகள் சேர்ந்து அதை முறியடித்தன. இதிலிருந்து சக்கரவர்த்தியின் ஆட்சி முற்றிலும் ஆட்டம் கண்டது. நாட்டின் புது வாழ்வுக் கேற்ற ஜனநாயகப் புரட்சிக்கு அதுவே வாய்ப்பான காலமாக அமைந்தது.

சக்கரவர்த்தியைத் தெய்வமாகக் கருதும் நாட்டில் ஆணவம் கொண்ட அதிகாரிகளின் ஆட்சியில், புரட்சி செய்வது எளிதான செயலன்று. அவிழ்த்துக் கொட்டிய மூட்டையிலிருந்து சிதறியோடும் நெல்லிக்காய்களைப் போல் ஒற்றுமையின்றிப் பிரிந்து கிடந்த மக்களைக் கொண்டு புரட்சி செய்து ஆட்சியைக் கைப்பற்றுவது எப்படி? ஆயினும் அதிகாரிகளின் அலட்சியமும், எங்கும் பரவியிருந்த லஞ்ச ஊழல்களும், அநீதிகளும், வேற்றார் போராட்டங்களும், நாள்தோறும் நாடு அடைந்து வந்த அவமானங்களும்,பட்டினியும், பசியும், பஞ்சமும் புரட்சிக்கு வழி வகுத்துவிட்டன. புரட்சியைத் தலைமை வகித்து வெற்றியுடன் நடத்த, இந்தியாவுக்குக் காந்தியடிகள் கிடைத்ததுபோல், சீன நாட்டுக்கு ஸன் யாட் - லென் என்ற மேதை தோன்றியிருந்தார்.

ஸன் யாட் - லென்

டாக்டர் ஸன் யாட் - லென் (1866-1925) தமது தாயகத்தின் சரித்திரத்தையும், உலக வரலாற்றை

123