பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/137

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குடியரசு ஏற்பட்ட பிறகும் நாட்டில் குழப்பங்களும், கலகங்களும் நிகழ்ந்துகொண்டே யிருந்தன. யுவான்ஷி-காயால் குடியரசுக்கு ஆபத்து நேர்ந்து விட்டதால், ஆங்காங்கே போரே தொழிலாய்க் கொண்டிருந்த பிரபுக்கள் தங்கள் கைவரிசைகளைக் காட்டி வந்தனர். கட்சிகளில்லாத தலைவர்களும், தலைவர்களில்லாத கட்சியினரும் அமைதியைக்குலைத்து வந்தனர். இடையில் 1914 இல் நடந்த முதல் உலகப் போரில் சீனாவும் நேச நாடுகளுடன் பலவந்தமாக இணைக்கப் பட்டுப் பல துயரங்களில் ஆழ்ந்தது. யுத்த முடிவிலும் உடன்படிக்கையில் அதற்கு நீதி கிடைக்கவில்லை. ஸன் யாட்-ஸென், தாம் தோற்றுவித்த குடியரசை நிலைநாட்டச் சிறிது காலம் ஜப்பானில் தங்கியும், சிறிது காலம் கான்டன் நகரில் தங்கியும் இடை விடாது போராடிக்கொண்டேயிருந்தார். 1917-இல் ரஷ்யாவில் வெற்றி பெற்ற பொதுவுடைமைப் புரட்சியையும், அதன் தலைவர்களின் செயல்களையும் அவர் உன்னிப்பாய்க் கவனித்து வந்தார். 1920-ஆம் ஆண்டில் சீனாவிலும் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்று நிறுவப்பெற்றது. கீழை நாடுகளுக்கு ரஷ்யா உறுதுணையாயிருக்கு மென்று கண்டு, ஸென் அதனுடன் தொடர்பு வைத்திருந்தார். ரஷ்யாவும் சீன நாட்டில் தான் பெற்றிருந்த பிரதேசங்களையும், விசேட உரிமைகளையும் விட்டுக்கொடுத்தது. இரு நாடுகளுக்கும் வர்த்தகத் தொடர்பு அதிகரித்தது. ரஷ்யாவிலிருந்து மைக்கேல் போரோடின் என்ற கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவர் ஸன் யாட் - லென்னுடைய கோமிண்டாங் கட்சிக்கு அலோசனை சொல்லி உதவிபுரிய அனுப்பப் பெற்றார் . கோமிண்டாங் சீர்திருத்தி அமைக்கப்பெற்று வந்தது. வாம்போவாவில் புதிதாக ஓர் இராணுவக் கலாசாலை ஆரம்பமாயிற்று. நாளடைவில் சீனக் கம்யூனிஸ்ட்

127