பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/163

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


கரிச் சுரங்கங்களும் நிறுவப்பட்டிருக்கின்றன. இவைகளில் ஆயிரத்திற்கு மேற்பட்டவை அதிக முதலீடுகள் உள்ளவை. (சாதாரண முதலீடு என்பது 50 லட்சத்திலிருந்து 100 லட்சம் யுஆன் வரை. இதற்கு மேற்பட்டதே அதிக முதலீடாகக் கருதப்படுகின்றது. இந்த 1000-ல் ஸோவியத் ரஷ்யாவின் உதவியுடன் அமைக்கப்பெற்றவை 1.13, கிழக்கு ஜெர்மனி, செக்கோஸ்லோவேகியா, போலந்து, ஹங்கேரி, ருமேனியா, பல்கேரியா ஆகிய மற்றைக் கம்யூனிஸ்ட் நாடுகளின் உதவியுடன் அமைக்கப்பெற்றவை 40க்கு மேற்பட்டவை. முதல் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் சராசரியாக மூன்று நாட்களுக்கு ஒரு பெரிய தொழிற்சாலை அல்லது சுரங்கத் திட்டம் வீதம் தோன்றிக் கொண்டிருந்தது. 1958-இல் நாள்தோறும் இரண்டு திட்டங்கள் வீதம் செயற்படத் தொடங்கின. பெரிய தொழிற்சாலைகளில் அன்ஷான் இரும்பு உருக்கு ஆலை ஆண்டுக்கு 30 லட்சம் டன் உற்பற்தி செய்யக்கூடியது. இது உலகிலுள்ள பத்து மாபெரும் உருக்காலைகளில் ஒன்று.

நாட்டில் உலோகக் கனிகளும், நிலக்கரி, எண்ணெய் கிடைக்கும் இடங்களும் ஏராளமாகக் கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றன. பெரிய நதிகள் பலவற்றில் அணைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மஞ்சள் நதிக்கு அணையமைக்கும் பெருந்திட்டமும் 1957-ல் ஆரம்ப மாகியிருக்கின்றது. பெரும்பாலான ஆறுகளின் கரைகள் செம்மைப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒன்பது வருட காலத்தில் மண்ணாலும் ‘காங்கிரீட்’டாலும் அமைக்கப்பட்ட அணைகள் ஏரிக்கரைகள் எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால் 7,000 கோடி கனமீட்டர் (ஆயிரம் கன அடி கொண்ட சுமார் 250 கோடிக் குழி அல்லது யூனிட்) ஆகும்.

153