பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/185

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 னிவரைப் போற்றி வந்தவர்கள். அவருடைய உபதேசங்களும், வாசகங்களும் அறிஞர்களுக்குத் தலைகீழ்ப் பாடமாகத் தெரியும். வீதிகளில் ரிக்க்ஷா இழுப்பவர்கள் கூடக் ‘கன்பூஸியஸ் சொன்னபடி’ என்று மேற்கோள்கள் கூறுவர். அத்தகைய பெரியாருடைய பீடத்தில்தான் இப்பொழுது கம்யூனிஸ்ட் மகரிஷி மாஸே-துங் அமர்ந்திருக்கிறார். கன்பூஸியஸ் உலக வாழ்க்கைபற்றியும், ஒழுக்கம், நாகரிகம், குடும்ப ஒற்றுமை, நல்ல அரசாட்சி முதலியவை பற்றியும் தத்துவங்களைப் போதித்துப் பெருமைபெற்றார். ஆனால் மா-வுக்குத் துப்பாக்கியே தெய்வம். ஆயிரக்கணக்கான மக்களை அரிந்து தள்ளச் செய்வதே ஆராதனை. மார்க்ஸின் கம்யூனிஸ்ட் தத்துவங்களையும், ஏகாதிபத்தியவாதிகளின் ஏமாற்று வாசகங்களையும், தேசபக்தர்களின் வீர முழக்கங்களையும் ஒன்றாகக் குழைத்து அவர் புதிதாகக் கூறும் கொள்கைகளே மக்களுக்கு மந்திரங்கள். கன்பூஸியஸ் குடும்பங்களை அடிப்படையாகக் கொண்டு சமுதாயத்தை அமைத்தார். மா— குடும்பங்களைத் தகர்த்து வருகிறார். ‘மனிதர்களுக்குள் உள்ள சம்பந்தத்தின் முதல் தத்துவம் நம்பிக்கைக்குப் பாத்திரமாயிருத்தல்’ என்று கன்பூஸியஸ் உபதேசம் செய்தார். கம்யூனிஸ்ட் சீனாவை நம்பினால் தயங்கித் தவிக்க வேண்டியதுதான் என்ற அளவுக்கு உலகிலே பல நாடுகளும் புரிந்து கொள்ளும்படி மாஸே-துங் தமது நாட்டைத் தயாரித்து வருகிறார். போரில் தர்மம், சத்தியம், கருணை, ஒழுங்கு எதையும் கவனிக்கக் கூடாது என்பது அவர் உபதேசம்.

பதின்மூன்று நூற்றாண்டுகட்கு முன்னால் சீனாவில் லியாங் குங் என்று ஒரு பிரபு இருந்தார். அவருடைய ஸூங் நாட்டின் மீது சூ-நாட்டு மன்னன் கி. மு. 638 இல் படையெடுத்து வந்தான். எதிரியின் படைகள்

175