பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 முழுதும் பகவான் புத்தருடைய 2,500 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாட ஏற்பாடாகியிருந்தது. அதில் கலந்து கொள்ளத் தலாய் லாமாவும் இந்தியாவுக்கு வந்தார். அவர் புறப்படுமுன்னால், திபேத்திலிருந்த சீனத் தளபதி, இந்தியாவில் அவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப்பற்றி அவருக்கு நீண்ட நேரம் உபதேசம் செய்தார். திபேத்தில் முதலில் கொஞ்சம் எதிர்ப்பு இருந்தாலும், எல்லாம் அமைதியாகிவிட்டதாகச் சொல்ல வேண்டுமென்றும், இந்தியத் தலைவர்கள் இந்திய-திபேத்து எல்லைகள் பற்றிக் கேட்டால், அவை பீகிங்கிலுள்ள வெளிநாட்டு இலாகாவுக்குரிய விஷயங்கள் என்று கூறிவிடவேண்டு மென்றும் அவர் எச்சரிக்கை செய்தார். புத்த ஜயந்தியில் தலாய் லாமா ஆற்றவேண்டிய சொற்பொழிவையும் லாஸாவிலேயே தயாரிக்கச் செய்து, அத்தளபதி அதையும் சரிபார்த்துத் திருத்திக் கொடுத்தாராம்!

இந்தியாவில் தலாய் லாமாவுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆங்காங்கே மக்கள் திரள்திரளாகக் கூடி அவரைத் தரிசித்தார்கள். புதுடில்லியில் தலாய் லாமா முதலில் ராஜகட்டத்திற்குச் சென்று தேசத் தந்தை காந்தியடிகளின் சமாதியில் அஞ்சலி செய்தார். அப்பொழுது உலகத்திலேயே தலைசிறந்த உத்தமரான மகாத்மா உயிரோடிருந்திருந்தால் தமக்கு என்ன உபதேசம் செய்திருப்பார் என்று தலாய் லாமா தமக்குள் கற்பனை செய்து பார்த்துக்கொண்டாராம்.

புத்த ஜயந்தி விழாக்களில் கலந்து கொண்டபின், அவர் பிரதம மந்திரி நேரு அவர்களைச் சந்தித்துப் பேசினர். திபேத்திய மக்களின் உணர்ச்சிகளையும், நிலைமைகளையும் எடுத்துச் சொல்லி, தாம் இந்தியாவிலேயே தங்கியிருக்க விரும்புவதாயும், அவ்வப்போது உலக நாடுகளிடையே திபேத்தின் நிலைமையைப் பற்

230