பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நிறைபுகழ் எய்திய உரைவேந்தர்

121


“செந்தழிழ்த் திறனும், பன்னூற் பயிற்சியும், ஆராய்ச்சி யாற்றலும், உரைகாணும் உரனும், மாணவர்க்கு விளங்கக் கற்பிக்கும் வன்மையும், சிவநெறித் தேர்ச்சியும், நூலியற்றும் நுண்ணறிவும், நிரந்தினிது சொல்லும் நெஞ்சுறுதியும், உலகியல் உணர்வும், ஆங்கில மொழியறிவும் ஆகிய இவை ஒருங்கே அமையப் பெற்ற பேராசிரியர்; தோலா நாவின் மேலோர்; புலத்துறை முற்றிய புலவர்!”

என்பன போன்ற பாராட்டுரைகள் அவ்வறிக்கையில் இடம் பெற்றிருந்தன.

மணிவிழா நாளாகிய 16-1-1964 அன்று, மாலை பேராசிரியர், குதிரை பூட்டப்பட்ட ‘சாரட்டு’ வண்டியில், மதுரை மீனாட்சி திருக்கோயில் அம்மன் சந்நிதியிலிருந்து நான்கு சித்திரை வழியாக, நாதசுர இன்னிசையுடன், ஊர்வலமாகக் கழகமன்றத்திற்கு அழைத்து வரப்பெற்றார்.

கழகப் புரவலர் கி.பழநியப்பனார் ‘வரவேற்புரை’ நிகழ்த்த, செயலர், ச.சாம்பசிவனார், ‘வாழ்த்துரை’ படித்து வழங்கக் கழகப் பெருமைதரு தலைவர் தமிழவேள் பி.டி. இராசனார், பேராசிரியருக்குப் ‘பொன்னாடை’ போர்த்திச் சிறப்பித்தனர். ‘கலையன்னை’ இராதா தியாகராசனார், தம் ஆசிரியப் பெருந்தகையின் உயர் பண்புகளைப் பலபடப் பாராட்டி ‘உரைவேந்தர்’ எனும் பட்டம் பொறிக்கப்பட்ட தங்கப் பதக்கம் ஒன்றினை அளித்தனர். அப்போது, கூடியிருந்த மக்கள் அனைவரும், ‘உரைவேந்தர் வாழ்க!’ என வாழ்த்தொலி முழங்கினர். உரைவேந்தரின் இன்னுயிர்த் தோழர் பேராசிரியர் க.வெள்ளை வாரணனாரும், பொறியர் சி. மணவாளனாரும், உரைவேந்தரைப் பாராட்டிச் சிறப்புரையாற்றினர். இறுதியில், உரைவேந்தர் தமக்கு அளித்த இச்சிறப்புக்குத் தமக்கே உரிய செந்தமிழ் நடையில் நன்றி தெரிவித்தார்.

இவ் ‘உரைவேந்தர்’ எனும் ஒப்புயர்வற்ற பட்டமே, இவருக்கு இறுதிவரை நின்று நிலவுவதாயிற்று!

மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில், மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார் துணைவேந்தராக இருந்தபோது, 29-3-1980 அன்று நடந்த சிறப்பு நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் மேதகு. பிரபுதாசு பி.பட்வாரி, உரைவேந்தருக்குத் ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ எனும்