ராஜம் கிருஷ்ணன்
167
இந்திரா அறிந்து தெரிந்து இதை எப்படி அநுமதித்தார்?
முடி மன்னர் ஆட்சிகளில் தனிநபர் அதிகாரமும் துதி பாடுதலும் இயல்பாகவே இருப்பதாகும். இதுவே முடியாட்சியின் குறைபாடுமாகும். மக்களுக்கும் மன்னருக்குமிடையே எந்த விதத்திலும் சமமில்லாத தொடர்பில்லாத வித்தியாச நிலையே, மக்களை மன்னாராட்சிக்கு எதிராகக் கிளர்ந்தெழ வழி வகுத்திருக்கிறது.
அதை மாற்றிச் சீராக்குவதற்கான ஒரே வழிமுறை, எல்லோரும் வாக்குரிமை பெற்று, அதைச் சரியான வழியில் பயன்படுத்த ஓர் ஆட்சியைத் தேர்வு செய்வதுதான்.
ஆனால் இங்கே அந்த வழிமுறையைக் கையாண்டும் புண்ணியமில்லை. குடிப்பிறப்பே ஆட்சி தருமத்தை நிர்ணயிப்பதாக விடிந்துவிட்டது. ஜனநாயகம் சகல மக்களுக்கும் ஆட்சி உரிமையை வழங்குவதாகும். ஆட்சி புரிபவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி. மக்களனைவரும் இந்த அதிகாரப் பொறுப்பில் பங்கேற்றிருக்கின்றனர்.
இந்த மக்களாட்சி தருமமே வெறும் கேலிக் கூத்தாக முடியும் வண்ணம் இந்திராவின் தலைமையில் சஞ்சய் ஒரு சர்வாதிகார ‘தருமத்’தை நடை முறையாக்கினான்.
நேருவின் ஆட்சியில் எல்லோருக்கும் வாக்குரிமை என்ற வாயில் திறந்து விடப்பட்டாலும், வாக்குரிமை என்ற நாணயத்தை சமுதாயத்தின் கடைசி மனிதர் வரையில் கல்வியறிவும் அரசியல் உரிமை பற்றிய உணர்வும் உடைய வராய்ப் பயன்படுத்த வேண்டும் என்ற இலட்சியமே முதன்மைப்படுத்தப்படவில்லை. இலட்சியத்தின் அடிப்படை கூட முக்கியமாகக் கருதப்பட்டிருக்க வில்லை. அப்படிக் கருதப்பட்டிருந்தால், மக்களுக்குக் கட்டாயக் கல்வி - அரசியல் அறிவு பெறும் திட்டம் போர்க்கால