பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.24

இந்திய சமுதாய... / தாய்மையின் வீழ்ச்சி


தனு தாய்த்தலைவி, தாய்ச்சமுதாயங்கள் அசுர சமுதாயம் என்றும் தந்தை நாயகச் சமுதாயத்தினர் நாகரிகம் அடைந்தவர் என்றும் பிற்காலங்களில் கொள்ளும்படி, இதிகாச புராணங்கள் தேவர் அசுரர் என்றும், நல்லவர் தீயவர் என்றும் வரையறுக்கின்றன.

தனு வதம், தாயாண்மைச் சமுதாயம் வீழ்ச்சி பெற்றதன் அடையாளமாக, இப்படியும் பொருள் கொள்ளப்படுகிறது. இந்திரனின் வச்சிராயுத அடி, நீரைத்தடை கட்டிய (அணை) பந்தங்களை உடைக்கும் செயலாக உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது. பொது நன்மைக்குப் பாயக்கூடிய நீரை விடாமல் தேக்கி வைத்ததை, விடுவிப்பது ஒரு நல்ல செயல். தனு வதம் அப்படி ஒரு நல்ல செயலாம். மேகங்களின் சூல் கொண்ட நீரை விடுவிக்கும் இடி - மின்னலாக, இந்திரனின் வச்சிராயுதம் கருதப்பட்டிருக்கிறது.

உழவுக்கும் பயிர்த்தொழிலுக்கும் இன்றியமையாத நீர், தாயாண்மைக் குழுக்களால் (விரோதிகளால்) தடுக்கப் பெறுவதும், அவை தகர்க்கப்படுவதும், ஆநிரைகள் ஒளித்து வைக்கப் பெறுவதும், கவர்ந்து செல்லப்படுதலும் தொன்மைச் சமுதாயக் குழுக்களிடையே போரைத் தோற்று வித்திருக்கிறதென்பதில் ஐயமில்லை.

ருக்வேதம் (முதல் மண்டலம் 17-2) காட்டும் தனு விருத்திராசுரனின் அன்னை பற்றிய குறிப்பு, அவளைத் தாயாண்மைச் சமுதாயத்தலைவி என்பதைத் தெளிவாக்குகிறது. அப்போது பெண் படைகள் இருந்தன வென்றும் தெரிய வருகிறது.

ஆனால், பின்னர் இதே ருக்வேதத்தில், தனுவைக் கச்யபரின் மனைவியாகக் காட்டுகிறது. இவள் தானவர்களின் தாய் - தானவர் அசுரர்கள் என்றும் சுட்டுகிறது. கச்யபரின் இன்னொரு மனைவியாக அதிதி என்ற தாயும் குறிப்பிடப்படுகிறாள். இந்த அதிதியின் மைந்தர்கள் தேவர்களாகிய ஆதித்யர்கள் என்றும் சொல்லப்படுகிறது.