பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.ராஜம் கிருஷ்ணன்

61


கட்டிக்கொண்டு அந்நாள் சட்டசபையில் பல தேசியவாதிகள் - குறிப்பாகச் சத்தியமூர்த்தி, சீனிவாச சாஸ்திரி - ஆகியோர் கூச்சல் போட்டதாக, மூவலூர் இராமாமிர்தத்தம்மாள் தம் ‘தாசிகள் மோச வலை’ என்ற நாவலில் எழுதியுள்ளார். இது உண்மையே. இந்த ஆசிரியை, தன் நாவலின் வாயிலாக, ஆங்காங்கு பொட்டறுப்புச் சங்கங்களை ஏற்படுத்திப் பிரசாரம் செய்ததாகத் தகவல் தெரிகிறது. எதிர்ப்பு இல்லாமலிருக்குமா?

எட்டயபுரத்து வள்ளிக்கண்ணம்மாள், 1930களில் முத்துலட்சுமி அம்மையும், மூவலூர் அம்மையும் செயல்படு முன்பே, பாரதியார் அறிவுரையின்படி பொட்டறுத்துத் திருமணம் செய்து கொண்டாராம். ஆனால் மரபுப் பிடிகள் பதித்த குற்ற உணர்வுகள் கடைசி வரையிலும் அப்பெருமாட்டியை விடவில்லை.

“உடலால் நீ ஒருமுறை கெடுக்கப்பட்டவள். உனக்கு ஒழுங்கான இல்லறத்துக்கு ஏது உரிமை?”

இந்த மரபு, இன்றும் சினிமாக் கதைகள்,தொலைக்காட்சித் தொடர்கள் வாயிலாக மிகவும் சக்தி வாய்ந்த சாதனங்களால் சமூகத்துக்கு அறிவுறுத்தப்படுகிறது.

ஒரு முறை குலைத்து விடு. பிறது அவளுக்கு அதுவே வாழ்க்கையாகி விடும் என்பது தான் கொள்கை.

வறுமையை ஒழிக்க நீ உழைப்பானேன்? உடல் இருக்கிறதே? அது உனக்குச் சோறு மட்டுமா போடும்? ஆகா! நீயே பெருமாட்டி!

தன் குடும்பத்தை வாழவைக்க அவள் விடுதியில் உடல் வாணிபம் செய்தாள். ‘தன்னை விற்றுக் கட்டிய கணவரைக் காப்பாற்றிய பத்தினி’ - என்றெல்லாம் மறைமுகக் குத்தல்களை வழங்கும் நியாயங்கள் எத்தனை?