உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்பிய மீமாம்சகர்கள் ஆஸ்திகர்கள்தான். ஆனால் இவர்கள் தான் கடவுள் மறுப்பில் மிக முனைப்பாக இருந்தவர்கள். சைவர்களும், பாசுபதர்களும் சிவன் ஒருவனே சகல சக்திகளும் வாய்ந்த கடவுள் என்ற நம்பிக்கையுடையவர்கள். இவர்கள் வேதங்களைப் பிரமாணம் என்றே, முக்கியத்துவம் கொண்டவையென்றே கருதவில்லை. அதனால் கடவுள் நம்பிக்கை கொண்ட இவர்கள் நாத்திகர்கள் என்று வேதவாதிகளால் கருதப்பட்டார்கள். சமூக ஒடுக்குமுறையை நியாயப்படுத்தி, அரசின் பாதுகாப்புக்கு ஏற்ற நீதி-ஒழுக்க முறைகளை வகுத்த, மனு முதலிய நீதி நூலார், சைவர், பாசுபதர் முதலியோரைத் தீண்டத்தகாதவர் என வருணித்தார்கள். அவர்களைத் தீண்டிவிட்டால் உடனே குளிக்க வேண்டும் என்று எழுதி வைத்தார்கள். சமயவெறியும், பகைமையும் இந்தியாவிலும் இருந்துள்ளது என்பதற்கு நீதி நூல்களே. சான்று கூறுகின்றன.
ஆனால் ‘கடவுள்’ என்ற சொல்லுக்குத் தெளிவான பொருளை இந்தியத் தத்துவம் வழங்கியுள்ளது. கடவுள் என்பவர் “அனைத்தையும் படைத்து அளித்துக் துடைப்பவர், உலக ஒழுங்கு, நியதிகளுக்கெல்லாம் காரணம் ஆனவர் (moral governor). அவனன்றி ஓரணுவும் அசையாது.” இத்தகைய தன்மைகள் கொண்டவர் கடவுள், இக்கருத்தை ஏற்றுக் கொள்பவர்கள் ஆத்திகர்கள். இதனை மறுப்பவர்கள் நாத்திகர்கள்.
இத்தெளிவான பொருளில் மிகப் பெரும்பாலான இந்தியத் தத்துவவாதிகள் நாத்திகர்களே. “கடவுள்” என்ற மாயக்கருத்து ஒரு மூட நம்பிக்கை; பொய்யான ஒன்றை உண்மை என்று நம்புவது தவறாக மதிப்புச் செலுத்தப்படும் ஓர் கற்பனை என்றே நாத்திகவாதிகள் கருதினர்.

மிகப் பல நாத்திகவாதிகள் ‘கடவுளை’ஆழ்ந்த அங்கத உணர்ச்சியோடு கேலிசெய்தார்கள் ஒரே ஒரு உதாரணம் தருவோம். ஆத்திகர்கள் கடவுளுக்குப் பல இயல்புகளைக் கற்பனையில் படைத்தார்கள். சர்வ வல்லமை, சர்வ ஞானம், எவ்விடத்தும் இருத்தல் ஆகிய இயல்புகளை அவருக்கு அளித்

15